கொழுந்துவிட்டெரிந்த குப்பை கிடங்கு 8 மணி நேரத்திற்கு பின் தீ அணைப்பு | சென்னை செய்திகள் | Dinamalar
கொழுந்துவிட்டெரிந்த குப்பை கிடங்கு 8 மணி நேரத்திற்கு பின் தீ அணைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:46

குரோம்பேட்டை : பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில் உள்ள குப்பை கிடங்கு கொழுந்து விட்டு எரிந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



குப்பைக்கு தீயிட்டு கொளுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில், பல்லாவரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை மாற்று நிலையம் உள்ளது. அங்கு, நகராட்சி பகுதிகளில் இருந்து, தினமும் சேகரமாகும், 104 டன் குப்பை கொட்டப்படுகிறது.அங்கு, 5,000 டன்னுக்கும் அதிகமான குப்பை தேங்கி, மலைப்போல் காணப்படுகிறது.சிக்கல்இந்நிலையில், நேற்று காலை, 5:00 மணிக்கு, குப்பை கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது.சற்று நேரத்தில், தீ மளமளவென பரவி, கொழுந்து விட்டு எரிய துவங்கியது. நகராட்சி ஊழியர்கள் விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.ஆனால், தீ பரவியதால் அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.



இதையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தாம்பரம் தீயணைப்பு துறையில் இருந்து, இரண்டு வாகனங்கள் விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.கட்டுக்குள் வந்ததுநகராட்சி வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. எட்டு லோடுக்கும் அதிகமான தண்ணீரை ஊற்றி, கிட்டத்தட்ட, எட்டு மணி நேரத்திற்கு பின், மதியம், 1:00 மணிக்கு தீ கட்டுக்குள் வந்தது.இதற்கிடையில், செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லுாயிஸ், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர், குப்பை கிடங்கை விரைந்து, பார்வையிட்டனர்.இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், குப்பை கிடங்கை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, நகராட்சி சார்பில், சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X