'கொரோனா' தடுப்பூசி உயிரிழப்பை தடுக்கும்! மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:47

'தடுப்பூசி போட்டுக் கொள்வதால், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும். தகுதி வாய்ந்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்தாண்டு, ஜன., 16 முதல், நாடு முழுதும் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், முதலில் தடுப்பூசி குறித்த தயக்கம் இருந்தாலும், அதன்பின், மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, 45 வயதுக்கு மேற்பட்டவர்களில், தினமும், 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடிகர் விவேக், தாமாக முன்வந்து, அவரது குழுவினருடன் தடுப்பூசி போட்டு கொண்டார். அடுத்தநாள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்த நிலையில், தடுப்பூசியால் தான், அவர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்படுகின்றன. ஆனால், 'நடிகர் விவேக் இறப்பிற்கு, தடுப்பூசி, 1 சதவீதம் கூட காரணமில்லை. மாரடைப்பு, யாருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என, மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது:


இந்தியாவின், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானது. தடுப்பூசி போட்டு கொண்ட பின், கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தொற்று ஏற்பட்டாலும், இரண்டு, மூன்று நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவர். குறிப்பாக, 82 வயதான துரைமுருகனுக்கு தொற்று ஏற்பட்டாலும், அவர், தடுப்பூசி போட்டு கொண்டதால், பெரிய அளவிலான பாதிப்பின்றி நலமுடன் இருக்கிறார். மேலும், தடுப்பூசி போட்டு கொள்வதால், மாரடைப்பு ஏற்படாது. என்னிடம் வரும், 100க்கும் மேற்பட்ட இதய நோயாளிகள், தடுப்பூசிகள் போட்டப்பின், நலமுடன் வாழ்கின்றனர். தடுப்பூசியால் சிறு, சிறு பிரச்னைகள் வரலாம். ஆனால், உயிரிழப்பை ஏற்படுத்தாது. எனவே, அனைவரும் தவறாமல், தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.


- டாக்டர் அர்த்தநாரி, இதய சிகிச்சை நிபுணர், சென்னை.


இஸ்ரேல் நாட்டில், அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு, மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநிலையை, இந்தியாவிலும் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், அதன் வீரியம் குறைவாக இருக்கும். அதன் வாயிலாக, மற்றவர்களுக்கு தொற்று பரவாது. அவர்களையும் பெரிய அளவில் பாதிக்காது. ஆனால், தடுப்பூசி போடாத நிலையில், ஒவ்வொரு முறையும் தொற்று கட்டுக்குள் வந்தாலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால், மீண்டும் அதிகரித்து, ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, நோய் தொற்று பரவலை தடுக்க வேண்டும்.


- டாக்டர் ஆனந்தகுமார், கதிரியக்க சிகிச்சை நிபுணர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை.


நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. தடுப்பூசி மூலமாக மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை விரைவில் உருவாக்க முடியும். அதன் மூலமாகவே கொரோனா தீவிரத்தை குறைக்க முடியும். தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்.


பா.சதீஸ்குமார், வட்டார மருத்துவ அலுவலர், சென்னிமலை.


கொரோனா தடுப்பூசி மிக பாதுகாப்பானது. உலக சுகாதார நிறுவனம் ஒத்துக்கொண்ட தரத்தில், இந்தியாவில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும். தடுப்பூசி செலுத்துவதால் நோயின் தீவிர தன்மை குறையும். நோய் பரவல் தடுக்கப்படும். தடுப்பூசி மிக பாதுகாப்பானது. நமது தேசத்துக்கு செய்யும் தொண்டாக கருதி, தடுப்பூசி போட்டுகொள்ள முன்வர வேண்டும்.


டாக்டர் பி.பி.அருள்மோகன், பொது மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர், சென்னிமலை.


கொரோனா தடுப்பூசியானது சர்க்கரை, பிரசர், ரத்தகொதிப்பு, போன்ற நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக போட வேண்டும். அவர்கள் இந்த தடுப்பூசியை போட்டால் வராது என்பது அர்த்தம் இல்லை. இதனால் தொற்றின் தீவிர தன்மையை குறைக்கும். வீண் வதந்திகளை மக்கள் நம்பாமல், கொரோனா தடுப்பூசியினை போட்டுக்கொள்ள வேண்டும்.


டாக்டர் கே.சக்தி கிருஷ்ணன், மருத்துவர், சின்னதம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகதார நிலையம்.


கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி இரண்டுமே மக்களுக்கு பாதுகாப்பானது தான். புன்செய்புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சராசரியாக தினமும், 40 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தடுப்பூசி குறித்து மக்களுக்கு அச்சம் தேவையில்லை. சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட துணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு, தாங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை வழக்கமாக எடுத்து கொள்ளலாம்.


எஸ்.வெங்கடாசலம், வட்டார மருத்துவ அலுவலர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பு.புளியம்பட்டி.


வரும்முன் காப்போம் என்ற வகையில் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். ஊசி போட்டு கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படாது. அதிக பட்சமாக ஊசி போட்ட இடத்தில் லேசான கொப்பளம் வரும். இரண்டு தடுப்பூசிகளும் போட்ட பின் கொரோனா வந்தால் இரு தினங்களில் சரியாகி விடும். ஊசி போட்டு கொள்வோர் தங்களுக்கு சர்க்கரை, பிரசர், இதயநோய் உள்ளிட்ட பிரச்னை இருந்தால், அதை டாக்டரிடம் சொல்லி, ஆலோசனை பெற்று போட்டுக்கொள்ளலாம். மேற்கண்ட நோய் உள்ளவர்களுக்குதான், எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் அவர்கள் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் தாய்மார்கள் தாராளமாக போட்டு கொள்ளலாம். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களும் போட்டு கொள்ளலாம். மது அருந்துபவர்கள், ஊசி போட்டுக் கொள்ளும் முன், 24 மணி நேரம் ஊசி போட்ட பின், 24 மணி நேரம் மதுவை தொடக்கூடாது.


- டாக்டர் கே.சுதாகர், இருதய சிகிச்சை நிபுணர், ஈரோடு.


கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் இரண்டு பலன் உண்டு. ஒன்று உங்களை நீங்களே பாதுகாத்து கொள்வது, இரண்டாவது இந்த சமுதாயத்தையும் பாதுகாக்கின்றீர்கள். தடுப்பூசி போட்டு கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அதனால் தான், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள, அரசு அறிவுறுத்தியுள்ளது. ஊசி போட்டு கொள்பவர்கள், முன் பதிவு செய்து அழைக்கும் போது சென்று ஊசி போட்டுக்கொள்ளவும். தனியார் மருத்துவமனைகளில், 250 ரூபாய் கட்டணம். அரசு மருத்துவமனைகளில் இலவசம். 100 சதவீதம் பாதுகாப்பானது. மக்களை பொறுத்தவரை ஒருவகையான அச்ச உணர்வு உள்ளது. ஊசி போட்டவுடன் காய்ச்சல் வரும். அது தானாக சரியாகி விடும். காய்ச்சல் வந்தால் தான், மருத்து நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.


டாக்டர் கே.எம்.அபுல்ஹாசன், குழந்தைகள் நல மருத்துவர், ஈரோடு.


கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டு தடுப்பூசிகளும் மக்களுக்கு மிகவும் பாதுகாப்பானது தான். இவற்றால் இதுவரை எந்தவித பக்க விளைவுகளும் வரவில்லை. மேலும், கொரோனா இந்த ஆண்டுடன் முடிவதில்லை. இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுக்கு இருந்து கொண்டு தான் இருக்கும். மக்கள் அனைவரும் வதந்திகளை நம்பாமல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, பொதுநல மருத்துவர், சத்தியமங்கலம்.


கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டு தடுப்பூசியும் மிகவும் பாதுகாப்பானது. இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. தடுப்பூசியால் நோயின் தீவிர தன்மையை குறைக்க முடியும். ஒருவேளை நோய் வந்தாலும் ஆபத்தான நிலைக்கு செல்வதை தடுக்கலாம். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் உடல் உறுப்புகளை சீராக வைக்க உதவுகிறது. தடுப்பூசி செலுத்துவதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.


டாக்டர் சு.செந்தில்குமரன், எம்.டி., தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர், ஈரோடு.


கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பூசி பாதுகாப்பானது. அனைவரும் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு எதிர்காலத்தில் கொரோனா தொடர்பான எந்த நோய்களும் வராது. மேலும், நுரையீரல் மற்றும் குடல் பின் விளைவு நோய்களை பாதுகாக்கிறது. தாமதம் செய்யாமல், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.


டாக்டர் எம்.ராஜேந்திரன், முன்னாள் டீன், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி, பெருந்துறை.


கொரோனா தொற்றை தடுக்க, தடுப்பூசி மட்டுமே நிரந்தர தீர்வு. தடுப்பூசி போட்டால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும். இதுவரை கோபி அரசு மருத்துவமனையில், 60 வயதுக்கு மேற்பட்டோர், 70 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போட்டவர்களில், ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவர்களில் மட்டுமே காய்ச்சல் ஏற்படுகிறது. ஆனால், தீவிர பக்கவிளைவு என்பது, லட்சத்தில் ஒருவருக்கு கூட ஏற்பட்டதாக இதுவரையில் தகவல் இல்லை.


டாக்டர் பி.டி.ஆனந்தன், தலைமை மருத்துவர், கோபி அரசு மருத்துவமனை.


- நமது நிருபர் குழு -


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X