'கொரோனா' தடுப்பூசி உயிரிழப்பை தடுக்கும்: மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டம் | சேலம் செய்திகள் | Dinamalar
'கொரோனா' தடுப்பூசி உயிரிழப்பை தடுக்கும்: மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:50

'தடுப்பூசி போட்டுக் கொள்வதால், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும். தகுதி வாய்ந்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்தாண்டு, ஜன., 16 முதல், நாடு முழுதும் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், முதலில் தடுப்பூசி குறித்த தயக்கம் இருந்தாலும், அதன்பின், மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, 45 வயதுக்கு மேற்பட்டவர்களில், தினமும், 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடிகர் விவேக், தாமாக முன்வந்து, அவரது குழுவினருடன் தடுப்பூசி போட்டு கொண்டார். அடுத்தநாள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்த நிலையில், தடுப்பூசியால் தான், அவர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்படுகின்றன. ஆனால், 'நடிகர் விவேக் இறப்பிற்கு, தடுப்பூசி, 1 சதவீதம் கூட காரணமில்லை. மாரடைப்பு, யாருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என, மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது:


இந்தியாவின், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானது. தடுப்பூசி போட்டு கொண்ட பின், கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தொற்று ஏற்பட்டாலும், இரண்டு, மூன்று நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவர். குறிப்பாக, 82 வயதான துரைமுருகனுக்கு தொற்று ஏற்பட்டாலும், அவர், தடுப்பூசி போட்டு கொண்டதால், பெரிய அளவிலான பாதிப்பின்றி நலமுடன் இருக்கிறார். மேலும், தடுப்பூசி போட்டு கொள்வதால், மாரடைப்பு ஏற்படாது. என்னிடம் வரும், 100க்கும் மேற்பட்ட இதய நோயாளிகள், தடுப்பூசிகள் போட்டப்பின், நலமுடன் வாழ்கின்றனர். தடுப்பூசியால் சிறு, சிறு பிரச்னைகள் வரலாம். ஆனால், உயிரிழப்பை ஏற்படுத்தாது. எனவே, அனைவரும் தவறாமல், தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.


- டாக்டர் அர்த்தநாரி, இதய சிகிச்சை நிபுணர், சென்னை.


இஸ்ரேல் நாட்டில், அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு, மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநிலையை, இந்தியாவிலும் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், அதன் வீரியம் குறைவாக இருக்கும். அதன் வாயிலாக, மற்றவர்களுக்கு தொற்று பரவாது. அவர்களையும் பெரிய அளவில் பாதிக்காது. ஆனால், தடுப்பூசி போடாத நிலையில், ஒவ்வொரு முறையும் தொற்று கட்டுக்குள் வந்தாலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால், மீண்டும் அதிகரித்து, ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, நோய் தொற்று பரவலை தடுக்க வேண்டும்.


- டாக்டர் ஆனந்தகுமார், கதிரியக்க சிகிச்சை நிபுணர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை.


கோவிட் - 19 தடுப்பூசி மிக பாதுகாப்பானது. இதற்கு முன், மனித உயிர்களை அழித்த பெரியம்மை, போலியோ, காலரா, தொண்டை அடைப்பான், கக்குவான் போன்ற உயிர் கொல்லிகள், தடுப்பூசி மூலமே முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டன. கொரோனாவுக்கும் தடுப்பூசி தான் தீர்வு. இது பாதுகாப்பானது, முழு பலன் தரக்கூடியது. முறையாக தயாரித்து, சரியான மருத்துவ நிபுணர்களால், தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதால், அதை செலுத்திய பின், கொரோனா வந்தாலும், அபாய கட்டத்தில் இருந்து தப்பலாம். ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடியாக பரவக்கூடியது கொரோனா. அதனால், ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு, தொற்று தன்மையை குறைத்து, உங்கள் மூலம், நோய் பரவலை அறவே தடுத்து விடலாம்.


- எம்.கே.செல்வகளஞ்சியம், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர், 2வது அக்ரஹாரம், சேலம்.


தடுப்பூசி போட்டுக்கொண்டால், கண்டிப்பாக இறப்பையும், தொற்றையும் தடுத்து விடலாம். அதனால், ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் என்ற வதந்தியை, யாரும் நம்ப வேண்டாம். ஊசி போட்டுக்கொண்டவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, அதன் செயல்திறன், உடலில் அதிகரித்திருப்பதை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது. காற்று மூலம் பரவுவதை தடுக்க, முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுவதோடு, தடுப்பூசி போட்டு, அவரவர் உயிரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து, அச்சம் தேவையில்லை.


- பி.பழனியப்பன், மூளை நரம்பியல், தண்டுவட சிகிச்சை நிபுணர், திருவாக்கவுண்டனூர் பைபாஸ் அருகே, சேலம்.


கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி, லட்சக்கணக்கான உயிர்கள் மடிய, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத, நம் அலட்சியமே காரணம். கொரோனா, வந்த பின் போராடினாலும் காப்பாற்ற முடியாத கொடிய நோய். அதன் பிடியில் இருந்து, உயிரை காப்பாற்ற, தடுப்பூசி மட்டுமே வழி. கோவிஷீல்டு, கோவாக்சின் என, ஏதாவது ஒரு தடுப்பூசி போட்டு, தன்னை மட்டுமல்ல, தன்னை சார்ந்துள்ள எல்லோரையும் பாதுகாக்க, அச்சமின்றி உடனே தடுப்பூசி போட்டுக்கோங்க. வதந்தியை நம்பினால், உயிரிழப்பை தடுக்க முடியாது.


- எம்.கே.ராஜேந்திரன், முன்னாள் முதல்வர், அரசு மருத்துவ கல்லூரி, சேலம்.


கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு வகை தடுப்பூசிகள் பாதுகாப்பானது. கொரோனாவை தடுக்க, தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். அதன்பிறகு வந்தாலும், நோய் பாதிப்பில் இருந்து, ஒரு வாரத்தில் மீண்டு விடலாம். உயிர் பயம், அறவே தேவையில்லை. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில், இலவசமாக போடப்படும் தடுப்பூசியை, மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


- எஸ்.யமுனாஸ்ரீ, ஏத்தாப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர், சேலம்.


கொரோனா இரண்டாம் அலையை முறியடிக்க, அதிலிருந்து பாதுகாக்க, தடுப்பூசி மட்டுமே சாத்தியம். இந்த ஊசியால், பக்க விளைவு வரும் என்ற, வாட்ஸ்ஆப் வதந்தியை, யாரும் நம்ப வேண்டாம். மருத்துவர்கள் உள்பட, மருத்துவ முன்கள பணியாளர்கள் அனைவரும், தடுப்பூசி போட்டுக்கொண்டதால், நோய் பாதிப்பு குறைந்து, அதிலிருந்து விடுபட்டு வருகின்றனர். அதை புரிந்து, ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு, மற்றவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ?ஹல்மெட் போடுவதால் விபத்து ஏற்படாது, நடக்காது என்பதல்ல. அதனால், விபத்தின் பாதிப்பு, தன்மை குறைவாக இருக்கும் என்பதை உணர்ந்தால், தடுப்பூசி அவசியமே.


- என்.பாலமுருகன், மூளை நரம்பியல் சிகிச்சை நிபுணர், காந்தி சாலை, சேலம்.


ரத்த கொதிப்பு, உடல் பருமன், நீரிழிவு நோய் உள்ளவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டால், உயிரிழப்பு, கடும் பக்கவிளைவு ஏற்படும். அதை தவிர்க்க, உடனே தடுப்பூசி போடுவது அவசியம். குறிப்பாக, அனைவருக்கும் உயிர் கவசம் போன்றது தடுப்பூசி. உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும். தடுப்பூசியை போட்டுக்கொண்டால், கொரோனாவால் வரும் நுரையீரல் தொற்று, அதனால் ஏற்படும் உயிர் இழப்பை தடுத்து விடலாம். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டதால், அதிலிருந்து மீண்டு, தற்போது ஆரோக்கியமாக உள்ளேன். என்னை போன்று, அனைவரும் தடுப்பூசி போட்டு அச்சமின்றி வாழலாம்.


- டி.செந்தில்குமார், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியர், சேலம்.


இந்தியாவில், கடந்த மூன்று மாதத்தில், 12 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதை, மொத்த மக்கள் தொகை, 120 கோடி பேருடன் ஒப்பிடுகையில், தடுப்பூசி போட்டவர்கள், சொற்ப எண்ணிக்கை தான். அதன் விளைவு, தடுப்பூசி போடாதவர்கள் மூலம், போட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வரும் அபாயம் உள்ளது. அதனால், அனைவரும், கட்டாயம் தடுப்பூசி போட்டாக வேண்டும். இன்னும், 3 முதல், 5 ஆண்டு வரை, கொரோனா பாதிப்பு, நம்மிடையே இருக்கும் என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால், ஒவ்வொரு தனி மனிதனும், தங்களை பாதுகாக்க, தடுப்பூசி தவிர்க்க முடியாத ஒன்று. பல்வேறு, சோதனைகளுக்கு பிறகே, தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், அதுகுறித்த அச்சம் துளியும் தேவையில்லை. தடுப்பூசி போட்ட, 12 கோடி பேரில், 600 பேருக்கு பக்க விளைவு. அதில், 120 பேருக்கு, ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அது, தடுப்பூசி போட்டு, வந்தது என, இதுவரை, நிரூபணம் செய்யப்படவில்லை. அமெரிக்காவில், 100ல், 62 முதல், 80 பேர், இஸ்ரேலில், 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், அந்நாடுகளில், கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது. இந்தியாவில், 100ல், 8 பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைவரும், தடுப்பூசி போடும் அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


- எஸ்.குமரேஷ், பொது மருத்துவர், சீலநாயக்கன்பட்டி, சேலம்.


கொடும் தொற்று நோய் தீவிரத்தை கட்டுப்படுத்த, அனைவரும் தடுப்பூசி போட்டாக வேண்டும். அத்துடன், முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி, தொற்று பரவாமல் தடுத்தாக வேண்டும். மே, 1 முதல், 18 வயது நிரம்பியவரும், தடுப்பூசி போட, மத்திய அரசு அனுமதித்துள்ளது. எதிர்கால சந்ததியினர், தலைமுறையினரை பாதுகாக்க, தடுப்பூசி பணியை, சேவையாக மேற்கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.


- பொன்.ஏ.ராஜராஜன், இருதய அறுவை சிகிச்சை துறை பேராசிரியர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம்.


- நமது நிருபர் குழு -


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X