போலீசுக்கு தெரியாமல் உடலடக்கம்; 6 பேர் மீது வழக்குப்பதிவு | தர்மபுரி செய்திகள் | Dinamalar
போலீசுக்கு தெரியாமல் உடலடக்கம்; 6 பேர் மீது வழக்குப்பதிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:57

அரூர்: அரூர் அருகே, மின்சாரம் தாக்கி இறந்த கூலித்தொழிலாளியின் உடலை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்த, ஆறு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


அரூர் அடுத்த வடகரை காலனியை சேர்ந்த செந்தில், சுரேஷ், 34, ஆகிய இருவரும், கடந்த மாதம், 16ல், ராமியம்பட்டியை சேர்ந்த கோகுல் என்பவரது வீட்டு மாடியில் கட்டட வேலை செய்ய சென்றனர். அப்போது, வீட்டின் அருகே ஒட்டியபடி சென்ற உயரழுத்த மின்கம்பியால் மின்சாரம் தாக்கி இருவரும் காயமடைந்தனர். இதையடுத்து, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பின், மேல்சிகிச்சைக்கு தர்மபுரி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் கடந்த, 15ல் சுரேஷ் உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தெரிவிக்காமல், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் வடகரை மயானத்தில் அடக்கம் செய்து விட்டனர். இது குறித்து தென்கரைகோட்டை வி.ஏ.ஓ., கார்த்திகேயன், 39, அளித்த புகாரின்படி, ராஜாமணி, 27, சேட்டு, 60, கரியமால், 41, சக்திதாசன், 39, உள்பட, ஆறு பேர் மீது கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், நேற்று மாலை, 4:00 மணிக்கு, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் முன்னிலையில், சுரேஷ் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X