15 நாட்களாக நீரின்றி தவிக்கும் மக்கள்; கண்டு கொள்ளாத ஓசூர் மாநகராட்சி | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
15 நாட்களாக நீரின்றி தவிக்கும் மக்கள்; கண்டு கொள்ளாத ஓசூர் மாநகராட்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:04

ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகரில், 15 நாட்களுக்கும் மேலாக தண்ணீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.


ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன எலசகிரி காமராஜர் நகரில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ஏராளமான சிறு, குறுந்தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு தற்போது வரை, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மாநகராட்சிக்கு சொந்தமான நான்கு போர்வெல்கள் மூலம்தான், இப்பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், மூன்று போர்வெல்கள் தண்ணீரின்றி வறண்டதால், ஒரே ஒரு போர்வெல் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம், 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய முடியவில்லை. சில குறிப்பிட்ட தெருக்களுக்கு மட்டும், குறைந்த நேரம் தண்ணீர் செல்கிறது. மீதமுள்ள பகுதிகளுக்கு கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வினியோகம் இல்லை. இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீருக்கு மிக சிரமப்பட்டு வருகின்றனர். ஓரளவு வசதி படைத்தவர்கள், பணம் கொடுத்து டிராக்டர் மூலம், தங்களது தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி கொள்கின்றனர். ஆனால் ஏழை, எளிய மக்களால், 600 ரூபாய் வரை செலவு செய்து, தண்ணீரை விலைக்கு வாங்க முடியவில்லை. தங்களின் அன்றாட தேவைகளுக்கே தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, மாநகராட்சி நிர்வாகம், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X