வேலூர் ஜி.ஹெச்.,ல் 7 பேர் பலி: ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கை | வேலூர் செய்திகள் | Dinamalar
வேலூர் ஜி.ஹெச்.,ல் 7 பேர் பலி: ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:20

வேலூர்: வேலூர் ஜி.ஹெச்.,ல் ஏழு பேர் பலியானது குறித்து, ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், வேலூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஏழு பேர் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏழு பேர் இறக்கவில்லை என்று கூறினார். பின்னர், ஏழு பேர் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு, நேற்று வேலூர் மருத்துவமனைக்கு வந்து ஆக்சிஜன் பிளான்டை பார்வையிட்டார். சம்பவம் நடந்த போது பணியில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் இறந்தவர்கள் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். ஏழு பேர் இறந்த சம்பவம் குறித்து, ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். டீன் செல்வி தலைமையில், 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வார்டு, சிறப்பு வார்டுகளுக்கு செல்லும் ஆக்சிஜன் பைப் லைன் ஐஸ் கட்டியாக உறைந்ததை அகற்றி விட்டு, புதியதாக மாற்றப்பட்டு ஆக்சிஜன் கசிவு நிறுத்தப்பட்டது.


வேலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ., முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயணன் கூறியதாவது: வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏழு பேர் இறந்ததாகவும், இதற்கு தொழில் நுட்ப காரணங்கள் என்றும் கூறுகின்றனர். இது குறித்து முழு அளவில் விசாரணை நடத்தி, மக்களுக்கு தெளிவுபடுத்தினால்தான், பயமில்லாமல் நோயாளிகள் சிகிச்சை பெற வருவர். ஆக்சிஜன் சிலிண்டர் பிரச்னையை தீர்க்க, நிரந்தர தொழில் நுட்ப பணியாளர்களை நியமித்து, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். இந்த பிரச்னைக்கு காரணம் மருத்துவமனை நிர்வாகம்தான். அப்போது பணியில் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


வேலூர் மாவட்டம், அணைக்கட்டு, தி.மு.க., - எம்.எல்.ஏ., நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: வேலூர் மருத்துவமனையில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏழு பேர் இறந்ததற்கு காரணம், அ.தி.மு.க., அரசும், மருத்துவமனையின் மெத்தன போக்குமேயாகும். எதிர் காலத்தில் இது போல் ஏற்படாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X