'கொரோனா' தடுப்பூசி உயிரிழப்பை தடுக்கும்:! மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டம் | கரூர் செய்திகள் | Dinamalar
'கொரோனா' தடுப்பூசி உயிரிழப்பை தடுக்கும்:! மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
16:30

'தடுப்பூசி போட்டுக் கொள்வதால், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும். தகுதி வாய்ந்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்தாண்டு, ஜன., 16 முதல், நாடு முழுதும் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், முதலில் தடுப்பூசி குறித்த தயக்கம் இருந்தாலும், அதன்பின், மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, 45 வயதுக்கு மேற்பட்டவர்களில், தினமும், 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடிகர் விவேக், தாமாக முன்வந்து, அவரது குழுவினருடன் தடுப்பூசி போட்டு கொண்டார். அடுத்தநாள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்த நிலையில், தடுப்பூசியால் தான், அவர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்படுகின்றன. ஆனால், 'நடிகர் விவேக் இறப்பிற்கு, தடுப்பூசி, 1 சதவீதம் கூட காரணமில்லை. மாரடைப்பு, யாருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என, மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது:


இந்தியாவின், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானது. தடுப்பூசி போட்டு கொண்ட பின், கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தொற்று ஏற்பட்டாலும், இரண்டு, மூன்று நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவர். குறிப்பாக, 82 வயதான துரைமுருகனுக்கு தொற்று ஏற்பட்டாலும், அவர், தடுப்பூசி போட்டு கொண்டதால், பெரிய அளவிலான பாதிப்பின்றி நலமுடன் இருக்கிறார். மேலும், தடுப்பூசி போட்டு கொள்வதால், மாரடைப்பு ஏற்படாது. என்னிடம் வரும், 100க்கும் மேற்பட்ட இதய நோயாளிகள், தடுப்பூசிகள் போட்டப்பின், நலமுடன் வாழ்கின்றனர். தடுப்பூசியால் சிறு, சிறு பிரச்னைகள் வரலாம். ஆனால், உயிரிழப்பை ஏற்படுத்தாது. எனவே, அனைவரும் தவறாமல், தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.


- டாக்டர் அர்த்தநாரி, இதய சிகிச்சை நிபுணர், சென்னை.


இஸ்ரேல் நாட்டில், அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு, மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநிலையை, இந்தியாவிலும் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், அதன் வீரியம் குறைவாக இருக்கும். அதன் வாயிலாக, மற்றவர்களுக்கு தொற்று பரவாது. அவர்களையும் பெரிய அளவில் பாதிக்காது. ஆனால், தடுப்பூசி போடாத நிலையில், ஒவ்வொரு முறையும் தொற்று கட்டுக்குள் வந்தாலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால், மீண்டும் அதிகரித்து, ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, நோய் தொற்று பரவலை தடுக்க வேண்டும்.


- டாக்டர் ஆனந்தகுமார், கதிரியக்க சிகிச்சை நிபுணர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை.


வரும் முன் காப்போம் என்ற பழமொழிக்கு ஏற்ப, கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி, அருமருந்தாக நமக்கு கிடைத்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஏதாவது ஒன்றை, கட்டாயம் அனைவரும் போட்டு கொள்ள வேண்டும். எனது மருத்துவமனைக்கு வரும், நோயாளிகளுக்கு இதை ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறேன். அதேபோல், வீட்டை விட்டு வெளியே வருவோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். வீட்டில் முதியவர்கள் இருந்தால், வெளியே சென்று விட்டு வருபவர்கள் குளித்து விட்டு செல்வது நன்மை பயக்கும். ஒரு சில நாட்களுக்கு இருக்கும் பக்க விளைவுகளுக்கு பயந்து கொண்டு, தடுப்பூசி போடாமல் இருந்தால், எதிர்காலத்தில் பெரும் விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.


- டாக்டர் வி.பாரத், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், கரூர்.


நாட்டில் இரண்டாம் கட்ட, கொரோனா பரவல் நாளுக்கு நாள் அச்சுறுத்தி, பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அதை எளிதாக கையாளும் வழிதான், தடுப்பூசி போட்டு கொள்வதாகும். பரவல் நிலையை உணர்ந்துதான் வரும், மே 1 முதல், 18 வயதை தாண்டியவர்களும், தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ரத்தகொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற இணைநோய் உள்ளவர்கள், கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். காரணம் அவர்களை, நோய் தொற்று எளிதாக தாக்க வாய்ப்புள்ளது. தடுப்பூசி போட்டு கொள்வதன் மூலம், தொற்றில் இருந்து தப்பித்து கொள்ளலாம். மேலும், தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு, வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட வேண்டாம். காய்ச்சல், தலைவலி, உடல் வலி வந்தால், பாராசிட்டமால் மாத்திரையே போதுமானது.


- கே.திவ்யா, மகப்பேறு நல மருத்துவர், கஸ்தூரிபாய் தாய்சேய் நல விடுதி, கரூர்.
கொரோனா தொற்று வராமல் தடுக்க, தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம். நான், என் குடும்பத்தினர், மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டோம். வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தடுப்பூசி குறித்து, வரும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். முதல் கட்டமாக, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவிய போது தொற்றும், உயிரிழப்பும் அதிகளவில் ஏற்பட்டது. தற்போது, அமெரிக்காவில் தொற்று பரவல் குறைந்துள்ளது. அங்குள்ள மக்கள் விழிப்புணர்வு அடைந்து, தடுப்பூசி போட்டு கொண்டதுதான் காரணம். அதேபோல், நமது நாட்டிலும் பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.


- டாக்டர் கே.எம். பாரதி கண்ணா, பொது மருத்துவர், பிரித்தி மருத்துவமனை, கரூர்.


முதலில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால், அப்போது பெண்கள் பயந்து கொண்டு, எதிர்பார்த்த அளவில் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டவில்லை. அந்த போக்கு தவறானது. பெண்கள்தான், குடும்பத்தை வழி நடத்துபவர்கள். இதனால், குடும்ப பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். சிலருக்கு காய்ச்சல் கூட வராது. அவரவர் உடல்நிலையை பொறுத்து காய்ச்சல், தலைசுற்றல், தலைவலி வர வாய்ப்புள்ளது. அதுவும், இரண்டு நாட்களில் சரியாகி விடும். கொரோனா தொற்றில் இருந்து, தங்களை காத்து கொண்டு குடும்பத்தை கவனிக்க பெண்கள் அவசியம் தடுப்பூசி போட வேண்டும்.


- டாக்டர் வி.கஸ்தூரி, மகப்பேறு நல மருத்துவர், கரூர்.


இந்தியாவில் தொற்று பரவல், இரண்டாம் கட்டத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது. இந்நிலையில், தடுப்பூசி தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுக்கு, பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும். தடுப்பூசி என்பது உடலில் எதிர்ப்பு சக்தியை, ஏற்படுத்துவதற்குதான். அப்போது காய்ச்சல், உடல் வலி ஏற்படுவது இயற்கையான ஒன்றுதான். அதற்கு பயந்து கொண்டு, தடுப்பூசி தவிர்ப்பது மிகவும் அபாயகரமான விஷயமாகும். தடுப்பூசி விஷயத்தில், வதந்திகளை நம்பாமல், அனைவரும் போட்டு கொள்ள வேண்டும்.


- டாக்டர் வி. ரஞ்சித், குழந்தைகள் நல மருத்துவர், கரூர்.


முதல் கட்ட கொரோனா வைரஸ் பரவலில், இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது, இரண்டாம் கட்ட பரவல் தொடங்கிய நிலையில், பல மாநிலங்களில் தொற்று பரவல், படுவேகத்தில் உள்ளது. அதற்கு, போதிய விழிப்புணர்வு இல்லாததுதான் காரணம். தடுப்பூசியின் அவசியம் குறித்து, உணராமல் பொது மக்கள் இன்னமும், விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். மருத்துவ கண்டுபிடிப்புகள் அனைத்தும், மனித குலத்தை காக்கவே அறிமுகப்படுத்தப்படுகிறது. தடுப்பூசி போட்டு கொண்டால், பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்து, பொதுமக்கள் வெளியே வர வேண்டும். தமிழகத்தில் நாள்தோறும், தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதற்கு ஒரே தீர்வு, அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.


- டாக்டர் செ.பிரபாகரன், சர்க்கரை நோய் நிபுணர் மற்றும் பொது மருத்துவர், அரவக்குறிச்சி.


கொரோனா தடுப்பூசி ரொம்ப ரொம்ப பாதுகாப்பானது. கொரோனா தடுப்பூசியை கண்டு பயப்படவேண்டிய அவசியமே இல்லை. கண்டிப்பாக பொது மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி நம்ம உயிரை காப்பாற்றுவதற்கு நல்ல ஒரு மருந்து. இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.


- டாக்டர் ஆ.ரமேஷ், கந்தசாமி மருத்துவமனை, குளித்தலை.


- நமது நிருபர் குழு -


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X