'கொரோனா' தடுப்பூசி உயிரிழப்பை தடுக்கும்!: மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
16:35

'தடுப்பூசி போட்டுக் கொள்வதால், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும். தகுதி வாய்ந்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்தாண்டு, ஜன., 16 முதல், நாடு முழுவதும் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், முதலில் தடுப்பூசி குறித்த தயக்கம் இருந்தாலும், அதன்பின், மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, 45 வயதுக்கு மேற்பட்டவர்களில், தினமும், 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடிகர் விவேக், தாமாக முன்வந்து, அவரது குழுவினருடன் தடுப்பூசி போட்டு கொண்டார். அடுத்தநாள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்த நிலையில், தடுப்பூசியால் தான், அவர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்படுகின்றன. ஆனால், 'நடிகர் விவேக் இறப்பிற்கு, தடுப்பூசி, 1 சதவீதம் கூட காரணமில்லை. மாரடைப்பு, யாருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என, மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது:


இந்தியாவின், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானது. தடுப்பூசி போட்டு கொண்ட பின், கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தொற்று ஏற்பட்டாலும், இரண்டு, மூன்று நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவர். குறிப்பாக, 82 வயதான துரைமுருகனுக்கு தொற்று ஏற்பட்டாலும், அவர், தடுப்பூசி போட்டு கொண்டதால், பெரிய அளவிலான பாதிப்பின்றி நலமுடன் இருக்கிறார். மேலும், தடுப்பூசி போட்டு கொள்வதால், மாரடைப்பு ஏற்படாது. என்னிடம் வரும், 100க்கும் மேற்பட்ட இதய நோயாளிகள், தடுப்பூசிகள் போட்டப்பின், நலமுடன் வாழ்கின்றனர். தடுப்பூசியால் சிறு, சிறு பிரச்னைகள் வரலாம். ஆனால், உயிரிழப்பை ஏற்படுத்தாது. எனவே, அனைவரும் தவறாமல், தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.


- டாக்டர் அர்த்தநாரி, இதய சிகிச்சை நிபுணர், சென்னை.


இஸ்ரேல் நாட்டில், அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு, மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநிலையை, இந்தியாவிலும் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், அதன் வீரியம் குறைவாக இருக்கும். அதன் வாயிலாக, மற்றவர்களுக்கு தொற்று பரவாது. அவர்களையும் பெரிய அளவில் பாதிக்காது. ஆனால், தடுப்பூசி போடாத நிலையில், ஒவ்வொரு முறையும் தொற்று கட்டுக்குள் வந்தாலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால், மீண்டும் அதிகரித்து, ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, நோய் தொற்று பரவலை தடுக்க வேண்டும்.


- டாக்டர் ஆனந்தகுமார், கதிரியக்க சிகிச்சை நிபுணர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை.


ஒரு குடும்பத்தில், குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இல்லாமல் வந்து, அது குடும்பத்தில் உள்ள வயதானவர்களுக்கு பாதிக்கும் போது, அவர்களுக்கு கொரோனா பாதிப்பு, அதிகமாக காணப்படுகிறது. அவற்றை தடுக்க ஒரே வழி, தடுப்பூசி போட்டுக் கொள்வது. இதன் மூலம், நோய் பரவல், 80 சதவீதம் தடுக்கப்படும். அப்படி தடுப்பூசி போட்டு நோய் வந்தாலும், நமக்கு ஏற்படும் பாதிப்பு மிகக்குறைவு. குறிப்பாக இறப்பு தவிர்க்கப்படும். பக்கவிளைவு ஏற்படுகிறது என்பது பொய்யான செய்தி.


- டாக்டர் ரங்கநாதன், மாநில பொருளாளர், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், நாமக்கல்.


கொரோனா தொற்று பரவாமல் இருக்க, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெளியே செல்லும் போது, முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சல், இருமல், சளி இருந்தால், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.


- டாக்டர் சோமசுந்தரம், நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்.


கொரோனா தடுப்பு ஊசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். பக்க விளைவுகள் எதுவும் இல்லை. தொற்று நோயால் வரும் உயிர் சேதம் வராமல் காப்பாற்ற உதவிகரமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய், சிறுநீரக நோய்கள் உள்ளவர்களும் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளலாம். திருச்செங்கோடு ஊரக பகுதிகளில் மட்டும், 8,000 பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


- டாக்டர் அருள்குகன், திருச்செங்கோடு வட்டார மருத்துவ அலுவலர்.


தடுப்பூசிகளின் விளைவால் இஸ்ரேல் நாடு கொரோனாவைக்கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. முதியோர்களிடையே நோய் தொற்றுப் பரவலையும் தீவிர கொரோனாவையும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. பிரிட்டனில் தடுப்பூசி மூலம் நோய் தொற்றுப்பரவலை, 67 சதவீதம் குறைத்திருக்கின்றனர். அமெரிக்காவில் தடுப்பூசிகளின் விளைவால் நான்காம் அலை கட்டுப்பாட்டில் இருக்கிறது. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.


- டாக்டர் சங்கர், குழந்தைகள் நல மருத்துவர், ப.வேலூர்.


கொரோனா தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை. பலகட்ட பரிசோதனைக்கு பிறகே மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. கடந்த ஜனவரி, 16ம் தேதி முதல்நாளே நான் தடுப்பூசி எடுத்துக்கொண்டேன். மக்கள் அனைவரும் தயங்காமல் எடுத்துக்கொண்டு நோய் பரவலை தடுக்க வேண்டும். நம் மக்கள் தொகையில், 60லிருந்து, 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசியை செலுத்தினால் மட்டுமே இந்த நோயை கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.


- டாக்டர் ரமேஷ், அரசு மருத்துவர், ராசிபுரம்.


கொரோனாவுக்கு எதிராக தற்போது தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. நோய், இறப்பிலிருந்து நம்மை இது பாதுகாக்கிறது. தடுப்பூசி பாதுகாப்பானவை. தடுப்பூசி போட்ட சிலருக்கு கை, கால் வலி வரலாம். அனைத்துக்கும் மாத்திரை எடுத்தாலே சரியாகி விடும். எனவே, தடுப்பூசி பாதுகாப்பானது. இதனை போடுவீர்; கொரோனாவை வெல்வீர்.


- டாக்டர் வீரமணி, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை.


தற்சமயம் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி போட்டுகொள்வது மட்டுமே. அதனால் எவ்வித பாதிப்பும், பக்க விளைவுகளும் கிடையாது. நான் இரண்டு தவணை தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டேன். எவ்வித பாதிப்பும் இல்லை.


- டாக்டர் ஞானசேகரன், குழந்தைகள் மற்றும் பொது நல மருத்துவர், நாமகிரிப்பேட்டை.


ஒரு தடுப்பூசியை, நான்கு கட்டமாக பரிசோதனை செய்த பிறகே, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவர். அதனால், பயப்பட வேண்டியதில்லை. துணை நோய் இருக்கிறவர்களுக்கு, அரசு முன்னுரிமை அளிக்கிறது. தினமும், 300 முதல், 350 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். அதனால், பயப்பட தேவையில்லை. தடுப்பூசி போட்டுக் கொண்டால்தான், கொள்ளை நோயில் இருந்து நாம் வெளியே வரமுடியும்.


- டாக்டர் மகாலட்சுமி, குழந்தைகள் நல மருத்துவர், அரசு மருத்துவ கல்லூரி, நாமக்கல்.


- நமது நிருபர் குழு -


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X