மதுரை, :'பாசிட்டிவ்' நோயாளிகள் வெளியில் சுற்றித் திரிவதால் கொரோனா வேகம் மதுரையில் அதிகரித்து வருகிறது.கடந்தாண்டு அறியாமையால் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையிலும் மக்கள் விழிப்புணர்வால் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் தவிர்த்தனர்.
தற்போது பரவல் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையிலும் பயமின்றி வெளியே சுற்றுகின்றனர். பாசிட்டிவ் நோயாளிகளும் தடையின்றி செல்கின்றனர். ஒரு தெருவில் 3 - 5 பேர் பாதிக்கப்பட்டால் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்வதால் பாதிப்பு அடுத்தடுத்த பகுதிகளுக்கு எளிதில் பரவுகிறது. மதுரையில் கான்பாளையம் 1வது தெருவில் தொடங்கியது தற்போது 5வது தெரு வரை கட்டுப்பாட்டு பகுதியாக வேகமாக மாறி வருகிறது.ஒவ்வொரு தெருவாக சென்று நோயாளிகளை கட்டுப்படுத்துவது என்பது காவல்துறைக்கோ, மாநகராட்சிக்கோ இயலாத விஷயம். தனிமனித விழிப்புணர்வு மட்டுமே பரவலை தடுக்கும் என்பதால் அப்பகுதி மக்களே கண்காணித்து நோயாளிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் டாக்டர்கள்.