வேகப்படுத்தலாமே! சாமளாபுரம் குளம் புனரமைப்பு பணியை...... தண்ணீரின்றி நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
வேகப்படுத்தலாமே! சாமளாபுரம் குளம் புனரமைப்பு பணியை...... தண்ணீரின்றி நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

06 மே
2021
02:43
பதிவு செய்த நாள்
மே 06,2021 01:17

திருப்பூர் : நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து கொண்டிருப்பதால், சாமளாபுரம் குளம் புனரமைப்பு பணிகளை வேகமாக முடிக்க வேண்டுமென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்பூர் ஒன்றியத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது, சாமளாபுரம் பேரூராட்சி.



கோவை மாவட்ட எல்லையில் உள்ள அப்பகுதியின் முக்கிய நீராதாரமாக இருப்பது, சாமளாபுரம் குளம் மற்றும் பள்ளபாளையம் குளங்கள்.நொய்யல் ஆற்று தண்ணீரை ஆதாரமாக கொண்டு, குளங்கள் நிரப்பப்படுகின்றன. இதிலிருந்து வெளியேறும் உபரி நீர் பள்ளபாளையம் குளத்தை சென்றடைகிறது. சுற்றுப்பகுதியில், 10 கி.மீ., தொலைவில், நிலத்தடிநீராதாரத்தை பாதுகாப்பதில், இவ்விரு குளங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சாமளாபுரம் குளத்தில், ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். பள்ளபாளையம் குளத்தில், சில மாதங்கள் மட்டும் தண்ணீர் தேங்கும்.நொய்யல் சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, குளம் புனரமைப்பு பணி நடப்பதால், முன்கூட்டியே குளத்தில் தண்ணீர் தேங்க தடை விதிக்கப்பட்டது.



கடந்த ஓராண்டாக தண்ணீர் வரத்து இல்லாததால், குளம் வேகமாக வறண்டுவிட்டது.குளத்தில், குறிப்பிட்ட பகுதியில் மட்டும், குறைவான அளவு தண்ணீர் இருக்கிறது. மற்ற பகுதிகள் வறண்டு, பாலைவனமாக மாறிவிட்டன. பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர் வரத்து இல்லாததால், கிரிக்கெட் மைதானம் போல் மாறிப்போயுள்ளது.பராமரிப்பு பணிகள் அவசியம் என்றாலும், அப்பணிகளை விரைவாக முடித்து, குளத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.



விவசாயிகள் கூறியதாவது:நொய்யல் புனரமைப்பு திட்டத்தில் பணி நடப்பதால், ஓராண்டாக தண்ணீர் வரத்து தடுக்கப்பட்டுள்ளது. குளத்தை புனரமைப்பு செய்யும் பணியை வேகப்படுத்த வேண்டும். விரைவாக பணியை முடித்து, வரும் பருவ மழைக்காலத்துக்குள் தண்ணீர் கொண்டுவர வேண்டும்.சாமளாபுரத்துக்கு தண்ணீர் இல்லாததால், பள்ளபாளையம் குளமும் வறண்டு கிடக்கிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் வேகமாக சரிந்துவிடும் என்பதால், பணிகளை விரைந்து முடித்து, குளத்துக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X