சிறுத்தை தப்பியதாக வதந்தி வண்டலுார் மக்கள் பீதி | சென்னை செய்திகள் | Dinamalar
சிறுத்தை தப்பியதாக வதந்தி வண்டலுார் மக்கள் பீதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 மே
2021
05:05

தாம்பரம்-வண்டலுார் உயிரியல் பூங்காவில் இருந்து, சிறுத்தை தப்பியதாக எழுந்த வதந்தியால், வண்டலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியடைந்தனர். வண்டலுார் உயிரியல் பூங்கா, 1,265 ஏக்கர் பரப்பளவு உடையது. இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு, பராமரிக்கப்பட்டு வந்த, சிறுத்தை ஒன்று நேற்று காலை, பூங்காவில் இருந்து, தப்பியதாக தகவல் பரவியது.இது குறித்து, வண்டலுார் பூங்காவின் உயர் அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு போலீஸ் அகாடமி அதிகாரிகள், தகவல் தெரிவித்தனர். அதில், மூதாட்டி ஒருவர், சிறுத்தையை பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.விரைந்து செயல்பட்ட வனத்துறையினர், பூங்காவில் பாதுகாக்கப்படும் சிறுத்தைகளை எண்ணிப் பார்த்தனர். அங்கு, ஐந்து சிறுத்தைகளும் இருந்ததை அடுத்து, போலீஸ் அகாடமியை சுற்றியுள்ள கிராமங்களில் ஆய்வு செய்தனர். அதன் பின், வண்டலுார் உயிரியல் பூங்கா அதிகாரிகள்கூறியதாவது:ஊனமாஞ்சேரி, நல்லம்பாக்கம், அருங்கால், காரணைபுதுச்சேரி, கீரப்பாக்கம், குமிழி பெருமாட்டுநல்லுார் பகுதிகளில், காப்பு காடுகள் இருப்பதால், அங்கு, மான்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன.இதில், ஊனமாஞ்சேரியைச் சேர்ந்த, மூதாட்டி ஒருவர், மானை பார்த்து, தவறுதலாக சிறுத்தை எனக் கூறியதால், வீண் பதற்றம் ஏற்பட்டது. மேலும், இந்த வதந்தி வேகமாக பரவியதால், பொதுமக்கள் பீதியடைந்தனர். பூங்காவில் உள்ள, ஐந்து சிறுத்தைகளும், கவனமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X