கோபாலபுரம்-கோபாலபுரத்தில், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, விளையாட்டு மைதானங்களை மூடாததே காரணமென, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 15 மண்டலங்களிலும், கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாடில் உள்ள, கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தை தவிர, அனைத்து மைதானங்களும் மூடப்பட்டு உள்ளன.இதனால், வார நாட்கள் மட்டுமின்றி, விடுமுறை தினங்களில், ஏராளமான இளைஞர்கள் கொரோனா குறித்த அச்சமின்றி, முக கவசமும் இல்லாமல் கிரிக்கெட், கால்பந்து விளையாடி வருகின்றனர்.இதனால், இம்மைதானத்தை மூடக்கோரி, பலமுறை அப்பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கொரோனா பாதிப்பு குறையும் வரை, விளையாட்டு மைதானத்தை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சென்னையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில், தேனாம்பேட்டை மண்டலம் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.