அம்பத்துார்-அம்பத்துார் தொகுதியில் நிலுவையில் உள்ள திட்டங்கள், புதிய எம்.எல்.ஏ., மூலம் நிறைவேறும் என, தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை மாநகராட்சியில், 7வது மண்டலமாக உள்ள அம்பத்துார், தொகுதி மறு சீரமைப்பின் போது, 2011ல் புதிய சட்டசபை தொகுதியாக உருவானது.அப்போது நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வேதாச்சலம் எம்.எல்.ஏ., ஆனார். பின், 2016ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க.,வின் அலெக்சாண்டர் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார்.இதனால், அம்பத்துார் நகராட்சியாக இருந்தபோது துவங்கிய, பாதாள சாக்கடை திட்டம், முழுமையாக செயல்பாட்டிற்கு வந்து விடும்.குடிநீர் பிரச்னை தீர்ந்து விடும். சென்னை - திருப்பதி சாலை விரிவாக்கம் செய்யப்படும். அம்பத்துார் ரயில்வே மேம்பாலம் புதுப்பிக்கப்படும் என, தொகுதி மக்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.ஆனால், 10 ஆண்டுகள் கடந்தும், இந்த திட்டங்கள் எதுவும் நிறைவேறவில்லை. கொரட்டூர் ரயில்வே சுரங்க பாதை பணி முடியவே, ஐந்து ஆண்டுகள் ஆகின.பெரிய தொழிற்பேட்டையை கொண்ட அம்பத்துார் தொகுதியில், 10 ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சியும், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், பல கோரிக்கைகள் 'கோமா' நிலையில் கிடந்தன. ஆனால், சாலை, விளக்கு, மழை நீர் வடிகால் பணிகள் மட்டும், மாநகராட்சி மூலம் நடந்து, மக்களுக்கு ஆறுதலாக இருந்தன. இந்நிலையில், தொகுதியின் புதிய எம்.எல்.ஏ.,வான ஜோசப்சாமுவேல், 2011 முதல், 2016 வரை, அம்பத்துார் மண்டல குழு தலைவராக இருந்தவர்.மேற்கண்ட பிரச்னைகளை அறிந்தவர். மேலும், தி.மு.க., ஆட்சி அமைத்துள்ளதால், தொகுதிக்கான திட்ட பணிகளை விரைவாக நிறைவேற்ற, அரசின் ஒத்துழைப்பு, அவருக்கு முழுமையாக கிடைக்கும் என, மக்கள் நம்புகின்றனர்.அதனால், அவருக்கு நேரிலும், மொபைல் போனிலும் வாழ்த்து தெரிவிக்கும் தொகுதி மக்கள், பல ஆண்டு பிரச்னையான, குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், சொத்து வரி குறைப்பு, நீர்நிலைகளை துார் வாருதல் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை, முன் வைத்து, செய்வார் என, எதிர்பார்க்கின்றனர்.