சென்னை-சென்னை குடிநீர் வாரியத்தில், மேலாண்மை இயக்குனர் உள்ளிட்ட, 35 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில், கொரோனா பரவல் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதில், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை குடிநீர் வாரியத்தில், 2020ல், கொரோனா முதல் அலை பரவலின்போது, 50க்கும் மேற்பட்டோர், தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டனர்.இந்தாண்டில், கொரோனா இரண்டாம் அலையில், வாரிய அதிகாரிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதில், சிலர் மட்டும் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். பெரும்பாலானோர், சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன், 56, திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும், உயரதிகாரிகள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளிட்ட, 35 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.