திருவொற்றியூர்; திருவொற்றியூரில், செல்லப் பிராணியால், வாலிபர் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.சென்னை, திருவொற்றியூர், விம்கோ அடுத்த ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் சரவணன், 38. இவர், அதே பகுதியில், மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, விம்கோ நகர் ரயில் நிறுத்த நடைமேடையில், தன் நாயுடன் அமர்ந்திருந்தார்.அப்போது, திடீரென நாய் கட்டியிருந்த சங்கிலி, சரவணனின் கையில் இருந்து நழுவி, நாய் தண்டவாளத்தில் ஓடியது. அந்த வழித்தடத்தில், ரயில் அதிகம் வருவதில்லை என்பதால், வாலிபரும் மெல்ல நாயை பிடிக்க விரட்டிச் சென்றார்.அப்போது, எதிர்பாராத விதமாக, தண்டவாளத்தில் வந்த ரயில் இஞ்சின், வாலிபர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.விபத்திற்கு காரணமான நாய், ரயிலில் அடிபட்டு இறந்ததா; தப்பியோடி விட்டதா என தெரியவில்லை. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.