'ஆவின்' பாலகத்தில் திருட்டுபட்டினப்பாக்கம்: மந்தைவெளி, ஆர்.கே.மடம் சாலையில் உள்ள கோழிப் பண்ணை மைதானத்தில், 'ஆவின்' பாலகம் இயங்குகிறது. நேற்று காலை, பாலக ஊழியர்கள் வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கல்லாவில் இருந்த, 4,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது.
அதேபோல், ஆர்.கே.மடம் சாலையில் உள்ள, இரண்டு டீக்கடைகளின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் திருட முயற்சி செய்துள்ளனர். இந்த மூன்று சம்பவம் தொடர்பாகவும், பட்டினப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.தி.மு.க., பிரமுகருக்கு வெட்டுபுழல்: புழல், காந்தி நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் குமணன், 28. இவர், மாதவரம், வடக்குப் பகுதி, தி.மு.க., மாணவர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவருடைய நண்பர், சந்தோஷ், 28. இருவரும், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி அளவில், புழல், ஓடைப் பகுதி தெரு வழியே, டூ - வீலரில் சென்றனர்.
அப்போது, இவர்களது வாகனத்தை மறித்த இருவர், குமணனையும், சந்தோஷையும், அரிவாளால் வெட்டி தப்பினர். இது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு, 30, உட்பட, இருவரை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர்.
வழிப்பறி திருடர்களுக்கு வலைவேளச்சேரி: வேளச்சேரி, வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஷெரிப் ஷாருக், 24; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி பிரதான சாலையில், நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், ஷெரிப் ஷாருக்கின், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, மொபைல் போனை பறித்தனர். போனை மீட்க, ஷெரிப் ஷாருக், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் துரத்தி சென்றார்.
வேளச்சேரி, காந்தி சாலை அருகே, போனை மீட்க நெருங்கியதும், வாகனத்தை கீழே போட்டு, இருவரும் மொபைல் போனுடன் தப்பினர். வேளச்சேரி போலீசாரின் விசாரணையில், கீழே போட்டு சென்றதும், திருட்டு வாகனம் என தெரிந்தது. தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
'பேட்டரி' திருடன் சிக்கினார்கொடுங்கையூர்: கொடுங்கையூர், எம்.ஆர்.நகரில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காசிமேடு, 5வது தெருவைச் சேர்ந்த அஜயன், 39, என்பதும், கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் பகுதிகளில் பேட்டரி திருடி வந்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், இரு பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.
ஆட்டோ கடத்திய மூவர் பிடிபட்டனர்புழல்: கெல்லீஸ் பகுதியைச் சேர்ந்தவர் வினோத், 30; ஆட்டோ ஓட்டுனர். இவர், ஜன., 7ம் தேதி, மாதவரம் அடுத்த மூலக்கடையில், ஆட்டோவில் சவாரிக்காக காத்திருந்தபோது, அங்கு வந்த இருவர், 'தாம்பரம் செல்ல வேண்டும்' எனக் கூறி, ஆட்டோவில் பயணம் செய்தனர்.
மூலக்கடையில் இருந்து தாம்பரம் செல்ல, புழல் - மதுரவாயல் மேம்பாலம் அருகே சென்றபோது, நிறுத்துமாறு கூறி, அவர்கள், கத்தியை காட்டி மிரட்டி, ஆட்டோவை கடத்திச் சென்றனர்.
இது குறித்த புகாரின் அடிப்படையில், புழல் போலீசார் விசாரித்தனர். இதில், வினோத்தின் ஆட்டோ, பல்லாவரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்து, போலீசார் நேற்று முன்தினம், அங்கு சென்றனர்.
தொடர் விசாரணையில், பழைய பல்லாவரத்தைச் சேர்த்த ராம்குமார், 28, கொடுங்கையூரைச் சேர்ந்த ஜாபர், 30, தோமையார் மலை பகுதியைச் சேர்ந்த டேவிட் ராஜ், 30, ஆகிய மூவரை, போலீசார் கைது செய்தனர்.