ரூ.56.52 லட்சம்! கொரோனா கட்டுப்பாடுகளை மீறியோருக்கு அபராதம்...மாவட்டத்தில் 27,837 பேர் மீது போலீஸ் வழக்கு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
ரூ.56.52 லட்சம்! கொரோனா கட்டுப்பாடுகளை மீறியோருக்கு அபராதம்...மாவட்டத்தில் 27,837 பேர் மீது போலீஸ் வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
01:40

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் முக கவசம் அணியாதோர், சமூக இடைவெளியை கடைபிடிக்காதோர் என மொத்தம் 27,837 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, ரூ.56.52 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.



விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நாளொன்றிற்கு 350 முதல் 500 பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இதுவரை 22 ஆயிரத்து 31 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 139 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், நோயில் இருந்து குணமடைந்த 19 ஆயிரத்து 245 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 2,647 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த சுகாதார துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் முக கவசம் அணியாமல் செல்வோர், சமூக இடைவெளியே கடைபிடிக்காதோருக்கு எஸ்.பி., ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.அதன்படி, முக கவசம் அணியாதோருக்கு 200 ரூபாய், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய நான்கு போலீஸ் சப் டிவிஷன்களில் கடந்த ஏப்.8ம் தேதி முதல் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள முக்கிய சாலைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வழக்குப் பதிந்து வருகின்றனர்.இதில், நேற்று முன்தினம் வரை முக கவசம் அணியாமல் வாகனங்களில் சென்ற 27,611 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 226 பேர் மீதும் என மொத்தம் 27,837 வழக்குகள் பதிவு செய்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.அதன்படி, முக கவசம் அணியாதோர் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதோரிடமிருந்து 56 லட்சத்து 52 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிந்து அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முக கவசம் அணிந்து செல்லும் நிலைக்கு மாறிவிட்டனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X