ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 பேர் பலி | கடலூர் செய்திகள் | Dinamalar
ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 பேர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 மே
2021
01:26

கடலுார்:கடலுாரில், ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து, ரசாயன வாயு வெளியேறியதில், நான்கு தொழிலாளர்கள் இறந்தனர். 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கடலுார் முதுநகர் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, பூச்சி மருந்துக்கான மூலப்பொருட்கள் தயாரிக்கும், 'கிரிம்சன் பிரைவேட் லிமிடெட்' என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.வெளியேறிய வாயுநேற்று காலை முதல், 'ஷிப்ட்'டில், 25 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.



காலை, 7:00 மணியளவில், சவிதா, 35, என்ற தொழிலாளி, மூலப்பொருள் கலக்கும் பாய்லரை சுத்தம் செய்தார்.அப்போது, எதிர்பாராத விதமாக பாய்லரிலிருந்து அமோனியா எனும் ரசாயன வாயு வெளியேறியது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சவிதா மயங்கி விழுந்தார்.தொடர்ந்து, பாய்லர் வெடித்துச் சிதறியது. அப்பகுதி முழுதும் ரசாயன வாயு பரவி, புகை மூட்டமானது.அங்கு பணிபுரிந்த, 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி, வெளியே வர முடியாமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.



தகவலறிந்து வந்த சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள், ரசாயன வாயுவை கட்டுப் படுத்தினர். மயங்கி கிடந்த தொழிலாளர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



செல்லும் வழியில் சவிதா, கணபதி, 25; ராஜ்குமார், 42; விஜேஷ் ராஜ், 25, ஆகிய நால்வர் இறந்தனர். 22 - 45 வயதுடைய 14 பேர், கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவ இடத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பார்வை யிட்டார். பின், மருத்துவமனைக்கு சென்று, காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி, உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் அறிவுறுத்தினார்.



ரூ.18 லட்சம் நிவாரணம்



இறந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கும் தலா, 15 லட்சம் ரூபாயும், காயமடைந்த, 14 பேருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என, தொழிற்சாலைநிர்வாகம் அறிவித்தது.'பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா, 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா, 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X