தொற்றால் பாதித்த தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மகளால் அதிர்ச்சி | ஈரோடு செய்திகள் | Dinamalar
தொற்றால் பாதித்த தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மகளால் அதிர்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 மே
2021
13:31

பு.புளியம்பட்டி: கொரோனா தொற்றால் பாதித்த தாயை, வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மகளால், புன்செய்புளியம்பட்டியில் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி நகராட்சி, சவுடேஸ்வரி அம்மன் கோவில் அருகே, கே.வி.கே.சாமி வீதியை சேர்ந்த, 65 வயது மூதாட்டிக்கு, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி விட்டது. கணவன் இறந்ததால், அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் மூதாட்டி காய்ச்சலால் பாதித்தார். கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வந்த மூதாட்டியை, மகள் மற்றும் மருமகன் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் வீட்டு கேட் முன் அமர்ந்து விட்டார். புளியம்பட்டி நகராட்சி அதிகாரிகள், மூதாட்டிக்கு உணவு வாங்கி கொடுத்தனர். அவரது குடும்பத்தினருடன் பேசினர். ஆனாலும், மகள் மற்றும் மருமகன், வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தந்தனர். அங்கு சென்ற போலீசார், 'இரவு மட்டும் தங்க அனுமதியுங்கள்; காலையில் மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விடுகிறோம்' என கேட்டுக்கொண்ட பிறகே, வீட்டுக்குள் அனுமதித்தனர். நகராட்சி அதிகாரிகள், சத்தி அரசு மருத்துவமனைக்கு, மூதாட்டியை நேற்று காலை அழைத்து சென்றனர். தொற்று பாதித்த தாயை, மகளே வீட்டுக்குள் அனுமதிக்காதது, அப்பகுதி மக்கள், அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X