சென்னை-முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், முதல் முறையாக சொந்த தொகுதியான கொளத்துாரில் நேற்று ஆய்வு செய்து, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவராண உதவிகளை வழங்கினார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னை கொளத்துார் தொகுதியில் இருந்து, மூன்றாவது முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் முதல்வர் பதவியேற்ற பின், கொளத்துாருக்கு நேற்று முதல் முறையாக சென்றார். துாய்மை பணியாளர்களுக்கு, 69வது வார்டில், தி.மு.க., சார்பில் தினமும் உணவு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.பின், கொளத்துார் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், ஊரடங்கால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.கொரோனா தடுப்பு பணிகளையும், முதல்வர் ஆய்வு செய்தார். திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில், தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டார். பெரம்பூர், ஜி.கே.எம்., காலனியில் உள்ள ரேஷன் கடையில், கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுவதையும், அவர் பார்வையிட்டார்.கொளத்துார், ஜவஹர் நகரில் உள்ள தி.மு.க., அலுவலகத்தில், 100 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அங்கிருந்து அவர் காரில் செல்ல முயன்ற போது, தீபக், 42, என்ற மாற்றத்திறனாளி, முதல்வரை வழிமறித்தார். 'மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட வேண்டும்' என, அவர் கோரிக்கை விடுத்தார். அவரிடம், 'கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்து, முதல்வர் அங்கிருந்து சென்றார்.முதல்வரின் ஆய்வு பணியில், அமைச்சர் சேகர்பாபு, எம்.பி., தயாநிதி, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.