ஆதம்பாக்கம்- -ஆலந்துார் மண்டலத்தில், வாகனத்தில் வீடு தேடிச் சென்று, தடுப்பூசி போடும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.ஆலந்துார் மண்டலத்தில், 2,433 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதன் தாக்கத்தை குறைக்கும் வகையில், மண்டலத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு கட்டமாக, வாகனம் வாயிலாக, வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மண்டல உதவி கமிஷனர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது:ஆலந்துார் மண்டலத்தில், கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, மண்டலம் முழுதும் தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன.மண்டலம் முழுதும், 45 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.அடுத்தகட்டமாக, குடியிருப்பு பகுதிகளுக்கு, மருத்துவ குழுவினர் வாகனம் மூலம் நேரில் சென்று, தடுப்பூசி போடப்படுகிறது. இதனால், வீட்டில் உள்ள வயதானவர்கள், பெண்கள் பலனடைகின்றனர். இந்த வாகனம் ஒரு பகுதிக்கு செல்வதற்கு முன், அந்த பகுதியில், ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.