செஞ்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவது... அவசியம்! சி.டி., ஸ்கேன் உள்ளிட்ட வசதியின்றி மக்கள் அவதி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
செஞ்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவது... அவசியம்! சி.டி., ஸ்கேன் உள்ளிட்ட வசதியின்றி மக்கள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
23:04

செஞ்சி : செஞ்சி அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்தி, நவீனப்படுத்த வேண்டும் என டாக்டர்களின் கோரிக்கையை அமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



விழுப்புரம் மாவட்டத்தில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிய பகுதியாக செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாக்கள் உள்ளன. 80 சதவீத மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பை நம்பியுள்ளனர்.இவர்களின் குடும்பங்களில் எவருக்கேனும் விபத்து, நோய், பிரசவம் என அனைத்திற்கும் அரசு மருத்துவமனைக்கே வருகின்றனர்.சிறிய அளவிலான சிகிச்சைக்கு அந்தந்த பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, அறுவை சிகிச்சை, விபத்து சிகிச்சைக்கு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.



இங்கு நாள் ஒன்றுக்கு 1,000 முதல் 1,800 பேர் வரை புறநோயாளிகளாகவும், 50 முதல் 70 பேர் வரை உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.இம்மருத்துவமனையில் அவசர சிகிச்சை, பிரசவம், அறுவை, சித்த மருத்துவம், எக்ஸ்ரே பிரிவு உட்பட 17 பிரிவுகள் இயங்குகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகையின் அடிப்படையிலும், நோயாளிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டும் டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், துாய்மைப் பணியாளர்களை நியமித்துள்ளனர். ஆனால் தற்போது புறநோயாளிகள் பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவில் போதிய இட வசதி இல்லை. ஒரே நேரத்தில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வரும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்க இடமில்லை. புறநோயாளிகள் பிரிவில் நெரிசலில் நின்றபடி சிகிச்சை பெறுகின்றனர்.



மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், தினமும் மக்களை சந்திக்கும் போது எழும் பிரச்னைகள், இடம் பற்றாக்குறை உள்ளிட்டவைகளை எடுத்துக் கூறி, சிறந்த முறையில் சிகிச்சையளிக்க, மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமைச்சர் மஸ்தானிடம் கொடுத்துள்ளனர்.அதில், டாக்டர்கள், பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகம், அறுவை சிகிச்சை அரங்கம், உள்நோயாளிகள் பிரிவு, குடும்ப நல பிரிவு, எக்ஸ்ரே பிரிவு உள்ளிட்ட 13 பிரிவுகள் ஒரே வளாகத்தில் இயங்கும் வகையில், தேவையற்ற பழைய கட்டடங்களை அகற்றி விட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட வேண்டும்.



சி.டி., ஸ்கேன், அதிக திறன் கொண்ட கம்ப்யூட்டர் எக்ஸ்ரே வசதியை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.நாளுக்கு நாள் புதுப்புது நோயால் மக்கள் அவதிப்படும் நிலையில் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு நவீன உபகரணங்கள் அவசியமாகிறது. எனவே, டாக்டர்கள் தரப்பில் கொடுத்துள்ள மனு மீது அமைச்சர் மஸ்தான் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



சி.டி., ஸ்கேன் வசதி இல்லை



செஞ்சி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சி.டி., ஸ்கேன் எடுக்க முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு செல்ல செஞ்சியில் இருந்து நேரடி பஸ் வசதி இல்லை. விபத்தில் அடிபட்டு வருபவர்கள் வேறு வழியின்றி செஞ்சியில் உள்ள தனியார் மையத்தில் 3,500 ரூபாய் செலவு செய்து சி.டி., ஸ்கேன் எடுக்கின்றனர். வசதியற்றவர்கள் நகைகளை விற்றும், கடன் வாங்கியும் சி.டி., ஸ்கேன் எடுக்கின்றனர். எனவே ஏழைகளின் நலன் கருதி செஞ்சி அரசு மருத்துவமனையில் விரைவாக சி.டி., ஸ்கேன் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X