கனிந்தது! 'கம்பீர' காவல்துறையினரின் இதயம்: மக்களுக்கு மனிதநேயத்துடன் உதவி | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கனிந்தது! 'கம்பீர' காவல்துறையினரின் இதயம்: மக்களுக்கு மனிதநேயத்துடன் உதவி
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

19 ஜூன்
2021
02:52
பதிவு செய்த நாள்
ஜூன் 19,2021 02:24

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தனியார் பங்களிப்புடன் அமைச்சரிடம் பத்து ஆக்சிஜன் செறிவூடடிகள், மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது.காவல்துறை என்றாலே, கம்பீரம்; ஆனால், ஊரடங்கு காலத்தில், கருணையுள்ளமும், கனிந்திருக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில், முன்களப்பணியாளராக பாதுகாப்பு பணியில், இரவு, பகலாக காவல்துறையினர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பலரும், தொற்றால் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தோரும் பலர்.உயிரையும் பொருட்படுத்தாத, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியோடு, ஆதரவற்றோர், ஏழைகள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என பலருக்கும் தங்கள் கரங்களால், உதவிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இது, காவல்துறையினருக்கு பொதுமக்கள் மத்தியில், நல்ல 'இமேஜ்' உருவாக்குவதாகவும் அமைந்திருக்கிறது.


இவை, சில உதாரணங்கள்...திருப்பூர் தெற்கு போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., முத்துசெல்வன் கொரோனா நிவாரண பணிகளுக்கு தனது ஒரு மாத சம்பளமான, 31,384 ரூபாய்க்கான காசோலையை, கலெக்டரிடம் வழங்கினார். குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோதிமணி தினமும், 100 பேருக்கு உணவு பொட்டலம், வாட்டர் கேன், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை, கடந்த, 20 நாட்களுக்கு மேலாக ரோட்டோரம் உள்ளவர்களுக்கு வழங்கி வருகிறார். திருப்பூர் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோரும் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.


தாராபுரம், காங்கயம், உடுமலையை சேர்ந்த போலீஸ் டி.எஸ்.பி.,க்கள் தங்கள் பகுதியில், 44 குடும்பங்களுக்கு, 20 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை வழங்கினர்.10 ஆக்சிஜன் செறிவூட்டிகள்திருப்பூர் மாவட்ட போலீசார், 'ஷெல் இந்தியா' நிறுவன பங்களிப்புடன், ஆக்சிஜன் செறிவூட்டிகளை, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.


அமைச்சர் சாமிநாதன், இவற்றை வழங்கி பேசுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு தனியார் அமைப்பு மூலம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.


தற்போது, வழங்கப்பட்ட செறிவூட்டிகள், நெதர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட அதி நவீனமானவை. நோயாளிகளுக்கு ஒரு நிமிடத்துக்கு, ஐந்து லிட்டர் ஆக்சிஜன் வழங்கும் திறன் கொண்டவை; ஒரே சமயத்தில், இரண்டு நோயாளிகளுக்கு வழங்கும் வசதி கொண்டவை'' என்றார்.கலெக்டர் வினீத், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர், டி.ஐ.ஜி., முத்துசாமி, எஸ்.பி., செஷாங் சாய் ஆகியோர் முன்னிலையில், இவை வழங்கப்பட்டன.. டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, ஆர்.டி.ஓ., ஜெகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X