பார்ப்பதற்கு பிரமாண்டம்; பாதுகாப்பு கேள்விக்குறி: கோவையில் ஹவுசிங் போர்டு கட்டிய 1,848 வீடுகளில் குறைபாடு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பார்ப்பதற்கு பிரமாண்டம்; பாதுகாப்பு கேள்விக்குறி: கோவையில் ஹவுசிங் போர்டு கட்டிய 1,848 வீடுகளில் குறைபாடு
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

19 ஜூன்
2021
10:52
பதிவு செய்த நாள்
ஜூன் 19,2021 03:34

கோவையில் அரசு அலுவலர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள, 1,848 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில், பல்வேறு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டும், அவற்றை நிவர்த்தி செய்யாமலே திறக்கப்படவுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவையில் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த, தமிழக வீட்டு வசதி வாரியத்தின் அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. அதற்குப் பதிலாக, கவுண்டம்பாளையம் பகுதியில், 12.59 ஏக்கர் பரப்பளவில், 14 மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகளில், மொத்தம் 1,848 வீடுகள், ரூ.520 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தலா 15 பேர் செல்லும், 34 பெரிய லிப்ட்கள், 'ஸ்பேர்' லிப்ட்கள், பொது படிக்கட்டு மற்றும் எமர்ஜென்சி படிக்கட்டு, ஜெனரேட்டர் வசதி, ஒவ்வொரு வீட்டுக்கும் தனி மின் மீட்டர், இன்டர்நெட், இன்டர்காம் இணைப்புகள், 12.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க்குகள், குழந்தைகள் பூங்கா, பார்க்கிங் வசதிகள் என, பார்ப்பதற்கு பிரமாண்டமாக இந்த குடியிருப்பு அமைந்துள்ளது. ஆனால், கட்டடம் பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


என்னென்ன குறைபாடுகள்?

கடந்த 2019 ஜூலையில் இந்த கட்டடத்தை ஆய்வு செய்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தரக்கட்டுப்பாட்டு பிரிவு, கட்டுமானப் பணியில், பல்வேறு குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளது. தரக்கட்டுப்பாட்டுக்கான விதிமுறைகளின்படி, செங்கல் அளவு 4 மி.மீ., அளவு மட்டுமே வித்தியாசம் இருக்கலாம். ஆனால், இந்த கட்டடங்களில் பயன்படுத்தப்பட்ட செங்கல் அளவில் 115 மி.மீ., வரை வித்தியாசம் இருந்துள்ளது. சுவர் பூச்சு தடிமனில், 12 மி.மீ., வித்தியாசம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு 25 மி.மீ., வித்தியாசம் உள்ளது.ஆற்று மணலை வைத்து கட்டடம் கட்டுவதாகவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், எம்.சாண்ட் வைத்து, கட்டடம் கட்டப்பட்டுள்ளது.


திட்ட அனுமதியில் குறிப்பிட்டிருந்தபடி, அறையின் அமைப்பு, அளவு இல்லை. குளியலறை, தரைதளத்தை விட தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்துக்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக்கம்பிகள், முழுமையாக பரிசோதிக்கப்படவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தபடி, மின் பணிகளும் உரிய முறையில் நடக்கவில்லை. திட்டத்தில் பணியாற்றிய பொறியாளர்களின் கவனக்குறைவையே இது காட்டுவதாகவும், இதில் ஏற்படும் பழுதுகள், சீரமைப்புப் பணிகளுக்கான செலவை, செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஏற்க வேண்டுமென்றும், தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்பார்வைப் பொறியாளர் குணசேகரன் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.


பாதுகாப்பு முக்கியம்

தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்யாமலே, கடந்த மே 5ம் தேதி, ஆறரை கோடியும், கடந்த வாரத்தில் மூன்றரை கோடியுமாக மொத்தம், 10 கோடி ரூபாய், ஒப்பந்ததாரருக்கு அவசரமாக, 'செக்' வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமைப் பொறியாளர் சரவணனிடம் இதுகுறித்துக் கேட்பதற்காக, பலமுறை தொடர்பு கொண்டும் அவரிடம் பதில் பெறவே முடியவில்லை.இந்த திட்டப்பணியில் ஊழல் நடந்துள்ளதா என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பல ஆயிரம் அரசு அலுவலர் குடும்பங்கள் குடியேறப்போகும் இந்த கட்டடங்கள் பாதுகாப்பானவைதானா என்பதை உறுதி செய்ய வேண்டியது அதை விட முக்கியம்.


-நமது சிறப்பு நிருபர்-

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X