கிடுகிடு! மாவட்டத்தில் கட்டுமானப்பொருட்கள் விலை...வீடு கட்ட துவங்கிய நடுத்தர மக்கள் தவிப்பு | கடலூர் செய்திகள் | Dinamalar
கிடுகிடு! மாவட்டத்தில் கட்டுமானப்பொருட்கள் விலை...வீடு கட்ட துவங்கிய நடுத்தர மக்கள் தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2021
06:03

கடலுார் : கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்திய ஊரடங்கு காலத்திலும், கட்டுமானப் பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் வீடு கட்ட துவங்கிய நடுத்தர மக்கள் செய்வதறியாமல் திணறி வருகின்றனர்.தமிழகத்தில் கொரானா தொற்று 2வது அலை வேகமாக பரவ துவங்கி, அதிக இறப்பு இருந்ததால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் கட்டுமானப் பணிகளின் போது சமூக இடைவெளி இருப்பதால் இப்பணியை யாரும் தடை செய்யவில்லை. தற்போது கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது. கடலுார் பின் தங்கிய மாவட்டம் என்பதால் பசுமை வீடு, குடிசை மாற்று வாரியம் சார்பில் கான்கிரீட் வீடு, பிரதமரின் வீடு கட்டும் திட்டம் போன்ற பல திட்டங்கள் வாயிலாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகளவில் கான்கிரீட் வீடுகள் கட்டி வருகின்றனர்.கட்டுமானப் பொருட்களின் விலை அதிகளவு உயர்ந்துள்ளதால் வீடு கட்டுவோர் கவலை யடைந்துள்ளனர். வீடு கட்டுவதற்கு தேவையான செங்கல் ஒரு லோடு ரூ. 24 ஆயிரத்தில் இருந்து ரூ. 28 ஆயிரமானது. கம்பி கிலோ ரூ.49ல் இருந்து 65க்கு மேல் விற்கிறது. சிமென்ட் ஒரு மூட்டை ரூ. 420 ஆக இருந்தது. தற்போது ரூ.480 ஆக உயர்ந்துள்ளது.கட்டுமான பணிக்கு மணலுக்கு பதிலாக பயன்படுத்தப்படும் எம்.சாண்டு ஒரு லோடு ரூ.17 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. பி.சாண்டு ரூ.19 ஆயிரத்தில் இருந்து ரூ.22 ஆயிரமாக உயர்ந்துள்ளது.இவையெல்லாம் ஒரு புறம் இருக்க கட்டுமான தொழிலாளர்களின் கூலியும் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே நாளொன்றுக்கு ரூ.700 இருந்த கொத்தனார் கூலி ரூ.800 முதல் 850 வரையிலும், மேஸ்திரிக்கு ரூ.900 வரையிலும் கூலி உயர்ந்துள்ளது. அதேப்போல சித்தாள் களுக்கும் கூலி உயர்ந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுக்குள் கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், தற்போது வீடுகள் கட்ட துவங்கியுள்ள நடுத்தர மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர்.கட்டுமான பொருட்கள் விலை அதிகரித்து வருவதால் கட்டடம் கட்டுவதற்கு 35 சதவீதம் கூடுதலாக செலவாகும் என கட்டட கான்ட்ராக்டர்கள் கருதுகின்றனர். பெரிய அளவில் அடுக்குமாடி கட்டடம், அரசு கட்டடம் கட்டுமான பணிகளில் ஈடுபடுவோரும் பாதித்துள்ளனர்.இதனால் பல அரசு கட்டடங்கள் டெண்டர் எடுக்க ஆர்வம் காட்டுவதில்லை என ஒப்பந்த தாரர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கிடுகிடுவென உயர்ந்து வரும் கட்டுமான பொருட்களின் விலையால் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் சொந்த வீடு கட்டும் கனவு கேள்விக்குறியாகி வருகிறது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X