பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை மகிழ்ச்சியை பகிர்ந்த இஸ்லாமியர்கள் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை மகிழ்ச்சியை பகிர்ந்த இஸ்லாமியர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
00:10

பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில், பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு கூட்டுத்தொழுகை நேற்று நடந்தது.இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் கொண்டாடப்பட்டது.



பண்டிகையையொட்டி பெரிய பள்ளி வாசலில், நேற்று காலை, 7:00 மணிக்கு, பேஷ் இமாம் முகமது மன்சூர் ரஹ்மானி தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. பள்ளிவாசல் தலைவர் ஜாகீர்உசேன் மற்றும் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை செய்தனர். இதுபோன்று, சூளேஸ்வரன்பட்டி, குமரன்நகர், பல்லடம் ரோடு உள்பட நகரப்பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள 48 பள்ளி வாசல்களிலும் பக்ரீத் கூட்டுத்தொழுகை நேற்று நடந்தது. இனிப்புகள் வழங்கியும்; வாழ்த்துக்களை பகிர்ந்து பண்டிகையை கொண்டாடினர்.



கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, வடசித்துாரில் உள்ள பள்ளிவாசல்களில், இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் வயதானவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் பங்கேற்றனர். ஏழைகள், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்பு, குர்பானி வழங்கி மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடினர்.வால்பாறைவால்பாறை புதுமார்க்கெட் பகுதி பள்ளிவாசலில், பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று காலை, 10:00 மணிக்கு அசரத் அப்துல்ரசீது தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது.



பள்ளி வாசல் கவுரவத்தலைவர் அமீது, தலைவர் அப்துல்காதர், செயலாளர் கமாலுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல், சோலையாறு, சின்கோனா, முடீஸ், பெரியகல்லார், உருளிக்கல், சோலையாறுடேம் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. உடுமலை உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை நேற்று உற்சாகமாக கொண்டாடினர். காலையில் பள்ளி வாசல்களில் ஒன்று கூடிய இஸ்லாமியர்கள், அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டனர்.பின், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். பலரும் 'குர்பானி'கொடுத்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X