அதிகாரிகளுக்கும் பங்கு? மாயமான மண் கடத்தல் வாகனங்கள் என்னாச்சு.....நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டாச்சு... | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
அதிகாரிகளுக்கும் பங்கு? மாயமான மண் கடத்தல் வாகனங்கள் என்னாச்சு.....நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டாச்சு...
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
00:11

கோவில்பாளையம் : பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மண் கடத்தல் விவகாரத்தில், பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்திய மண் அள்ளும் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரி மாயமாகி, மூன்று வாரங்கள் ஆகியும், அதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.



சுமார் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ள வழக்கில், அதிகாரிகள் மவுனம் காப்பது ஏன் என, பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியில், 140 ஏக்கர் பரப்பளவில் காலிங்கராயன் குளம் உள்ளது. இந்தக் குளம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை.தன்னார்வலர்கள் சார்பில், குளம் துார்வாரப்பட்டு, கரைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, மதகுகள் பழுது பார்க்கப்பட்டன. நீர்வழிப்பாதைகள் சீரமைக்கப்பட்டன.



மண் கடத்தல் : கடந்த ஜூன் 27ம் தேதி, குளத்துக்கு சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குளத்துக்கு அருகே இருந்த விவசாய நிலத்தில் இருந்து, பாதை அமைக்கப்பட்டு, குளத்தில், 20 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டு, சுமார் 200 லோடு மண் கடத்தப்பட்டிருந்தது. கொண்டையம்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதிகாரிகள் ஆய்வுதாசில்தார் ரத்தினம் அங்கு ஆய்வு செய்தார். அங்கு இருந்த, மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை, அங்கேயே நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.



தொடர்ந்து, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், கனிமவளத்துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.வாகனங்கள் எஸ்கேப்?இதனிடையே, ஓரிரு நாட்களில், மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரமும், டிப்பர் லாரியும் காணாமல் போயின. இதுதொடர்பாக, அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.யாரைத் தப்புவிக்கஇதுகுறித்து கோவில்பாளையம் பகுதி மக்கள் கூறியதாவது:வழக்கமாக அனுமதியின்றி, அரசுக்கு சொந்தமான குளத்திலிருந்து மண் எடுக்கும் லாரியை உடனடியாக வருவாய் துறையினர் பறிமுதல் செய்வர்; போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் வருவாய்துறை பொறுப்பில் வைத்து, குறைந்தது ஒரு லோடுக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அபராத தொகை செலுத்தப்பட்ட பின்னரே, வாகனங்கள் விடுவிக்கப்படும்.ஆனால், 200 லோடு மண் கடத்தல் சம்பவத்தில், நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தவில்லை. போலீசிலும் புகார் தெரிவிக்கவில்லை. 24 நாட்கள் ஆகியும், அபராதம் விதிக்கப்படவில்லை. வழக்கு பதியப்படவில்லை.யாரைத் தப்புவிக்க அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர் எனத் தெரியவில்லை. இதனால், அதிகாரிகளுக்கும் இக்கடத்தலில் உடந்தை இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.ஒரு லோடு மண் கடத்தப்பட்டால், 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர். இச்சம்பவத்தில் 200 லோடு மண் என்பதால், 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்பிருக்கிறது. அதிகாரிகள் அமைதியாக இருப்பதைப் பார்த்தால், கணிசமான தொகை கைமாறியிருக்க வாய்ப்புண்டு. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், கனிமவளத்துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?அன்னுார் தாசில்தார் ரத்தினம்:"கனிம வளத் துறையினர் அங்கு ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்".மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் குமார்:"விதிக்க வேண்டிய அபராதம் குறித்த மதிப்பீட்டை வடக்கு வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி விட்டேன். சம்பந்தப்பட்ட நபர் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது".கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன்:"கனிமவளத்துறை பரிந்துரையின் அடிப்படையில் இன்னும் ஓரிரு நாளில் மண் கடத்தலில் ஈடுபட்ட லாரிகள் மீது அபராதம் விதிக்கப்படும்".

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X