போக்குவரத்து விதிமீறல்; ரூ.4.89 லட்சம் அபராதம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
போக்குவரத்து விதிமீறல்; ரூ.4.89 லட்சம் அபராதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
00:22

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சியில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த சிறப்பு வாகன சோதனையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, நான்கு லட்சத்து, 89 ஆயிரம் ரூபாய் அபராதம், வரி வசூலிக்கப்பட்டது,' என, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.



பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க சிறப்பு வாகன தணிக்கை நடந்தது.பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெயந்தி, கோகுலகிருஷ்ணன் குழுவினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.



வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதாவது:கொரோனா ஊரடங்கு காரணமாக வரும் செப்., மாதம், 30ம் தேதி வரை லைசென்ஸ் புதுப்பித்தல், இன்சூரன்ஸ், எப்.சி., பர்மிட் புதுப்பித்தல் பணிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பொள்ளாச்சி கோட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுவதை கண்காணிக்க சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகள் மற்றும் வளந்தாயமரம், கோபாலபுரம் உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில், கடந்த பத்து நாட்களாக வாகன தணிக்கை செய்யப்பட்டது.



வரி செலுத்தாதது; தனியார் நிறுவனத்துக்கு அனுமதி இல்லாமல் வாகனம் இயக்குதல், சரக்கு அதிகளவு ஏற்றிச் செல்லுதல் என விதிமீறல்கள் கண்டறியப்பட்டு மொத்தம், 21 வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.மொத்தம், நான்கு லட்சத்து, 89 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் வரி வசூலிக்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X