6 மாதங்களில் சென்னை விமான நிலையம் அசத்தல் | சென்னை செய்திகள் | Dinamalar
6 மாதங்களில் சென்னை விமான நிலையம் அசத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
05:35

சென்னை--கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரத்தின் போதும், ஆறு மாதங்களில், 1.67 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு, சென்னை விமான நிலைய சரக்ககம் வளர்ச்சி கண்டுள்ளது.கொரோனா காரணமாக, நாட்டில் ஒன்றரை ஆண்டுகளாக, சர்வதேச விமான சேவைகள் முற்றிலும் முடங்கி உள்ளன.உயர்வுபயணியர் விமான சேவை முடங்கிய போதும், சரக்கு விமான சேவைகள் தடையின்றி செயல்படுகின்றன. தற்போது சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு விமான பயணியர் சேவை, படிப்படியாக உயர்ந்து வருகிறது.ஆனால், சென்னை விமான நிலைய சரக்ககப் பகுதி, 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. சென்னை விமான நிலைய சரக்ககப் பிரிவில், வெளிநாடுகளிலிருந்து வழக்கமாக இறக்குமதியாகும் பொருட்களுடன், மருத்துவ பொருட்களும் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.குறிப்பாக, ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், அதிகளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.இதனுடன், வழக்கமாக வரும் கம்ப்யூட்டர், இயந்திரங்கள், அச்சு தொழிலுக்கான மூலப்பொருட்கள், ரசாயன கலவைகள், முறையான அனுமதியுடன் தங்கக்கட்டிகள் போன்றவைகளும் இறக்குமதி செய்யப்படுகின்றன.இதேபோல, ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள், மலர்கள், தாவர வகைகளும் பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.மேற்கு வங்கம், அந்தமான் போன்ற இடங்களில் இருந்து, பொருட்களை உள்நாட்டு விமானங்களில் சென்னைக்கு கொண்டு வந்து, இங்கிருந்து சரக்கு விமானங்களில், இலங்கை வழியாக, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.20 சதவீதம்இதன் காரணமாக, சென்னை விமான நிலைய சரக்ககம், ஏற்றுமதி, இறக்குமதியில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக இருந்த போதிலும், நடப்பாண்டில், அதிகளவு சரக்குகள் சென்னை விமான நிலைய சரக்ககத்தில் கையாளப்பட்டு உள்ளன.இதன்படி, ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை, 1 லட்சத்து 67 ஆயிரத்து 420 டன் சரக்குகளை, சென்னை விமான நிலைய சரக்ககம் கையாண்டுள்ளது. இதில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகளவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடந்துள்ளது. இது, கடந்த 2020ல், முதல் ஆறு மாதங்களை ஒப்பிடுகையில், 20 சதவீதம் அதிகம் என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X