முட்டை விலை ரூ.2.24; மக்கள் நம்ப வேண்டாம்: தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் அறிவுரை | நாமக்கல் செய்திகள் | Dinamalar
முட்டை விலை ரூ.2.24; மக்கள் நம்ப வேண்டாம்: தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் அறிவுரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
15:54

நாமக்கல்: 'ரூ.2.24க்கு முட்டை விற்பனை செய்வதாக வந்த விளம்பரத்தை நம்பி மக்கள் ஏமாற்றம் அடையக்கூடாது' என, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து, நிருபர்களிடம் சங்க தலைவர் சிங்கராஜ் கூறியதாவது: சமீபத்தில் வெளியான விளம்பரம் ஒன்றில், ஒரு முட்டை, 2.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று. முட்டை உற்பத்தி செலவே, 4.80 ரூபாய் ஆகிறது. அதிலும் வீடு, வீடாக சென்று வழங்குவது என்பதை ஆச்சரியமாக தான் பார்க்கிறோம். சத்துணவுக்கே, 4.85 ரூபாய்க்கு தான் அரசு முட்டைகளை கொள்முதல் செய்கிறது. கிராமப்புறங்களில் ஈமு கோழி வாங்கி ஏமாற்றமடைந்தது போல், யாரும் ஏமாற்றமடைந்து விடக் கூடாது. சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனத்திடம் தமிழக அரசு விசாரணை நடத்தி எந்த வகையில் முட்டைகளை வழங்குகின்றனர் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். கோவை, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும், இணைய வழியில் மட்டுமே முட்டைகளை பதிவு செய்ய வேண்டும் என்கின்றனர். சம்பந்தப்பட்ட முகவரியில் சென்று கோழிப் பண்ணையாளர்கள் சென்று பார்த்த நிலையில் அங்கு யாரும் இல்லை. இதுவரை அரசுக்கு கடிதம் எதுவும் அளிக்கப்படவில்லை. முட்டைகளை குளிர்பதன கிடங்குகளில், மூன்று மாதங்களுக்கு மேல் வைக்க முடியாது. அதனால் சேமித்து வைத்து விற்பனை செய்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பாக கோழிப் பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முதல்வரை சந்தித்து முறையிட உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X