கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்க முடியாது: அறநிலையத்துறை அமைச்சர் திட்டவட்டம் | சேலம் செய்திகள் | Dinamalar
கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்க முடியாது: அறநிலையத்துறை அமைச்சர் திட்டவட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
16:42

சேலம்: ''தனியாரிடம் கோவில்களை ஒப்படைக்க முடியாது,'' என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சேலத்தில் நேற்று கூறினார்.


சேலம் சுகவனேஸ்வரர், கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று ஆய்வு செய்த பின் கூறியதாவது: அறநிலையத்துறையை பொறுத்தவரை, 10 லட்சம் ரூபாய்க்கு வருமானம் உள்ள, முதல்நிலை கோவில்களில், 539 கோவில்களை பட்டியலிட்டுள்ளோம். அதில் கும்பாபிஷேக பணிக்கு எடுத்துக்கொண்ட கோவில், பணி தாமதமாகியுள்ள கோவில், ஆகம விதிப்படி, 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கோவில் என வகைப்படுத்தியுள்ளோம். திருப்பணி நடப்பவை, நடக்க வேண்டியவை என, அனைத்து கோவில்களுக்கும், 'மாஸ்டர் பிளான்' எனப்படும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சன்னிதானங்கள் மாற்றப்படாமல் ஆகம விதிப்படி திருப்பணி நடக்கும். வாய்ப்புள்ள இடங்களில் கோவில் வளாகத்தில், திருமண மண்டபம் கட்டப்படும்.


கடந்த, 50 ஆண்டாக, அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களின் வாடகை வருவதில் நிலுவை உள்ளது. இதை ஒழுங்குபடுத்த, ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கிறோம். கோவில் இடங்களுக்கு வேலி அமைத்து அறிவிப்பு பலகை வைக்கப்படும். பொருளாதார மீட்பு நடவடிக்கையாக, சட்டப்படி குத்தகைக்கு விடுவது, நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்பு, வெளிப்படை தன்மையுடன் விரைவில் அறிவிக்கப்படும். அந்தந்த வருவாய் கோவில்களுக்கு பயன்படுத்தப்படும். ஒன்பது ஆண்டாக கோவில்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன. காணிக்கை நகைகளை, கோவில் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டு, மீதியை உருக்கி, தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைக்கப்படும். இதன் மூலம், ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும். அறநிலையத்துறை கோவில்கள், தனியார் சொத்துகள் இல்லை. மன்னராட்சி காலத்தில் பல, வரலாற்றில் இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களாட்சிக்கு பின், அந்த நடைமுறைகள் அரசின் வசம் மாற்றப்பட்டன. பல மன்னர்கள், ஜமீன்தார், செல்வந்தர்களால் கோவில்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும்போது, தனியாரிடம் கோவில்களை ஒப்படைக்க முடியாது. ஏற்கனவே திருடுபோன சிலைகள், வெளிநாடுகளில் உள்ளதை கண்டறிந்துள்ளோம். அதை மீட்க, வழக்குகளை விரைவுபடுத்தி, தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், சேலம் கலெக்டர் கார்மேகம், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.


'நானே கொத்தனார்தான்': சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணிகளை ஆய்வு செய்தபோது, கல் மண்டபத்தில் எதற்காக கான்கிரீட் தூண் எழுப்பப்பட்டுள்ளது என, ஒப்பந்ததாரரிடம் அமைச்சர் கேள்வி கேட்டார். அவர் கூறிய பதிலில் திருப்தி அடையாத அமைச்சர், 'நானே கொத்தனார் தான்' என கூறினார். கட்டுமான பணி தொடர்பாக, 10 நாளில் திட்ட அறிக்கை தயாரித்து அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தேரை சுத்தப்படுத்தி, முறையாக பராமரிக்க அறிவுறுத்தினார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X