உடுமலை : உழவர் சந்தை வளாகத்தில் தரைத்தளம் பராமரிப்பில்லாமல், குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர்.
உடுமலை உழவர் சந்தைக்கு, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தினமும், 100க்கும் மேற்பட்ட விவசாயிகளும், 2 ஆயிரம் நுகர்வோரும் வந்து செல்கின்றனர்.இங்கு, காய்கறிகள், கீரைகள், பழங்கள், வாழை இலை, பால், தயிர், தேங்காய் எண்ணெய் உட்பட அனைத்து வகையான விளைபொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.
சந்தை வளாகத்தில் மேடையுடன் கூடிய கடைகள் குறைந்தளவு உள்ள நிலையில், பெரும்பாலான விவசாயிகள், தாங்கள் கொண்டு வரும் காய்கறிகளை தரை தளத்தில் வைத்து விற்பனை செய்கின்றனர்.உழவர் சந்தை வளாகத்திலுள்ள ரோடு, தரை தளம் ஆகியவை பராமரிப்பில்லாமல், குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், காய்கறிகள் கொண்டு வரும் விவசாயிகளும், வாங்க வரும் நுகர்வோர்களும் கடுமையாக பாதிக்கின்றனர்.
மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுவதோடு, தளத்தில் வைத்து விற்கப்படும் காய்கறிகளிலும், மண், குப்பை படிந்து வருகிறது.எனவே, உழவர் சந்தையின் தரைத்தளத்தை முழுமையாக சீரமைத்து, விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள், சிரமமில்லாமல் சந்தைக்கு வந்து செல்லும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.