உடுமலை : அயல் மகரந்த சேர்க்கை வாயிலாக, உற்பத்தியை அதிகரிக்க உதவும், தேனீக்கள் வளர்க்க, தோட்டக்கலைத்துறை வாயிலாக கூடுதல் மானியம் ஒதுக்க, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், விவசாய சாகுபடியில், பூச்சிக்கொல்லி பயன்பாடு அதிகரித்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையால், அனைத்து விளைநிலங்களிலும், குறிப்பிட்ட இடைவெளியில், களைக்கொல்லி தெளித்து வருகின்றனர். அதிக பயன்பாடு காரணமாக, விளைநிலங்களில், நன்மை செய்யும், பூச்சிகளுடன், தேனீக்களும் அதிகளவு பாதித்துள்ளன. இயற்கையாகவே மரங்களில், தேனீக்கள் கூடு கட்டுவது குறைந்துள்ளது.
தென்னை மற்றும் இதர சாகுபடிகளில், விளைச்சல் குறைய, மகரந்த சேர்க்கை பாதிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.எனவே கூடுதல் வருவாய் மற்றும் அயல் மகரந்த சேர்க்கை வாயிலாக, விளைச்சல் அதிகரிக்க, தேனீ வளர்ப்பை வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர்.
அயல்மகரந்த சேர்க்கை பணியை தேனீக்கள் மேற்கொள்வது விளைச்சலுக்கு, உதவியாக இருக்கிறது. ஒரு ஏக்கருக்கு, 20 பெட்டிகள் வைத்து தேனீக்கள் வளர்ப்பதால், தேன் வாயிலாக கூடுதல் வருவாயும், அயல் மகரந்த சேர்க்கையும் அதிகரிக்கும்.ஆனால், தேனீ பெட்டிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், சிறு, குறு விவசாயிகள், தேனீ வளர்க்க தயக்கம் காட்டுகின்றனர்.
முன்பு, தோட்டக்கலைத்துறை வாயிலாக, ஒரு விவசாயிக்கு 30 பெட்டிகள் வரை மானியத்தில், வழங்கப்பட்டது. தற்போது, 'உழவன்' செயலி வாயிலாகவும், தேனீ பெட்டி மானியத்துக்கு, அதிகளவு விவசாயிகள் விண்ணப்பிக்கின்றனர்.ஆனால், மானிய ஒதுக்கீடு இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றமடைகின்றனர். எனவே தோட்டக்கலைத்துறை வாயிலாக, வட்டார வாரியாக கூடுதலாக தேனீ பெட்டி மானியம் ஒதுக்கீடு செய்ய, விவசாயிகள், அரசை வலியுறுத்தியுள்ளனர்.