பொது நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
பொது நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2021
22:45

உடுமலை : குடிமங்கலம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம், அலுவலக கூட்ட அரங்கில், ஒன்றியக்குழு துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமையில் நேற்று நடந்தது.



பி.டி.ஓ.,க்கள், சுப்பிரமணியம், சிவகுருநாதன் முன்னிலை வகித்தனர்.ராஜமாணிக்கம் (தி.மு.க.,): ஒன்றிய பொது நிதி, நிதிக்குழு மானியம், வார்டுகளுக்கு, முறையாக, பிரித்து அளிக்கப்படுவதில்லை. அ.தி.மு.க., கவுன்சிலர், தலைவர் வார்டுகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



முருகானந்தம் (தி.மு.க.,): ஒன்றியத்திலுள்ள அனைத்து கவுன்சிலர்கள் வார்டுகளுக்கும், ஒரே மாதிரியாக நிதி ஒதுக்குவது அவசியமாகும்.முருகன் (அ.தி.மு.க.,): நிதி ஒதுக்கீடு அனைவருக்கும் பாரபட்சமின்றி ஒதுக்கப்படுகிறது; அ.தி.மு.க., கவுன்சிலர் வார்டுகளுக்கும் கடந்த முறை குறைந்தளவே, நிதி ஒதுக்கப்பட்டது.



ராஜமாணிக்கம்: நிதி ஒதுக்கீடு செய்யும் முன்னர், அதிகாரிகள் கவுன்சிலர்களை கலந்து ஆலோசிப்பதில்லை. பணிகள் துவங்கும் போதே நிதி ஒதுக்கீடு குறித்து தெரிய வருகிறது. ஒரு வார்டுக்கு, 12 லட்சம் ரூபாய் வரையும், பிறருக்கு, 4 லட்சம் ரூபாயே ஒதுக்கீடு செய்யப்படுவது உட்பட பல குளறுபடிகள் நடக்கிறது.



முரளி (அ.தி.மு.க.,): நிதிக்குழு மானியத்தில், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படியே, பணிகள் ஒதுக்கப்படுகிறது; இதில், பாரபட்சம் எதுவும் காட்டப்படுவதில்லை.பி.டி.ஓ., சுப்பிரமணியம்: ஒன்றியத்துக்கான நிதி ஒதுக்கீடு நிலுவையில் உள்ளது; அடுத்த கட்ட பணிகளின் போது, கவுன்சிலர்களிடம் கருத்துரு பெறப்படும்.



திவ்யா (தி.மு.க.,): நடப்பாண்டு, பசுமை மற்றும் தொகுப்பு வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என தெரியவில்லை.



கவிதா (தி.மு.க.,): நீண்ட காலத்துக்கு முன் கட்டப்பட்ட, தொகுப்பு வீடுகளை பராமரிக்க நிதி கிடைக்காமல், மழைக்காலத்தில், மக்கள் அவதிப்படுகின்றனர்.பி.டி.ஓ.,: பசுமை, தொகுப்பு வீடு பயனாளிகள் தேர்வு குறித்து அரசிடம் இருந்து இன்னும் வழிகாட்டுதல் பெறப்படவில்லை; பராமரிப்பு நிதி பெற விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.



விஜயலட்சுமி (தி.மு.க.,): கோட்டமங்கலம் ஊராட்சியில், குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக உள்ளது. முருங்கப்பட்டி உட்பட கிராமங்களில், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.ராஜமாணிக்கம்: பெரிய பட்டி ஊராட்சியில், குடிநீர் அளவீட்டு கருவி பழுதடைந்து, மாற்றப்படாமல், உள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர்.



கூட்டத்தில், மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஒன்றிய குழு தலைவர் சுகந்தி, கவுன்சிலர்கள், தமயந்தி, மோகனபிரியங்கா பங்கேற்கவில்லை.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X