கரையை காணோம்! பராமரிப்பில்லாத பிரதான கால்வாய்.. அவசர கதியில் நீர் திறப்பால் அச்சம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கரையை காணோம்! பராமரிப்பில்லாத பிரதான கால்வாய்.. அவசர கதியில் நீர் திறப்பால் அச்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2021
22:48

உடுமலை : பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ள நிலையில், பராமரிக்கப்படாமல் உள்ள பிரதான கால்வாயால், நீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.



பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், திருப்பூர், கோவை மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து, ஆறு மாதத்திற்கு ஒரு முறை நீர் வழங்கப்படுகிறது.இதன் அடிப்படையில், 4ம் மண்டல பாசனத்திற்கு, ஆக., 3ல் நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாசன நிலங்களுக்கு தேவையான நீர், திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு கொண்டு வரப்படுகிறது.



இங்கிருந்து, 126 கி.மீ., நீளமுள்ள பிரதான கால்வாய் வாயிலாக, பாசன நிலங்களுக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது.பாசன ஆதாரமாக உள்ள பிரதான கால்வாய், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. அதிலும், அணையிலிருந்து தீபாலபட்டி வரை, முதல் 7 கி.மீ., பகுதி, கால்வாயின் இரு புறமும் காணப்படும், கரிசல் மண் காரணமாக, கரைகள் உடைந்தும், மழைக்காலங்களில் உடைப்பு ஏற்பட்டும் வருகிறது.



கால்வாய் வழித்தடத்தில், கி.மீ., 4.700, 5.100 மற்றும் 5.300 வது கி.மீ., என, 5 கி.மீ., துாரம், முழுமையாக சீரமைக்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக, இரு கரைகளும் பலமாகும் வகையில், கம்பி கட்டி கான்கிரீட் கரைகளாக, மாற்ற, 100 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்டது.ஆனால், 5 ஆண்டுக்கும் மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், இழுபறியாகி வருகிறது. மேலும், கால்வாயின் பல இடங்களில், கான்கிரீட் கரைகள் உடைந்தும், சிலாப்கள் பெயர்ந்தும், மண் அரிப்பு ஏற்பட்ட நிலையில் காணப்படுகிறது.



மழை காலத்தில், 4ம் மண்டல பாசனம் துவங்கும் நிலையில், 5 சுற்று தண்ணீர் தடையில்லாமல், வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த, 2017 ல், பாசன காலத்தில், கரைகள் உடைப்பு ஏற்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் நீர் வழங்க முடியவில்லை.கடந்த, இரண்டாம் மண்டல பாசனத்தின் போதும், கன மழை காரணமாக, இரு முறை உடைப்பு ஏற்பட்டது; உடனடியாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.



ஆண்டு தோறும் தொடரும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பிரதான கால்வாயை முழுமையாக புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும். தற்போது துவங்கும், நான்காம் மண்டல பாசனத்தில், தடையில்லாமல் நீர் வினியோகம் செய்யும் வகையில், உடைப்பு ஏற்படாமல், தற்காலிக பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.



நிதி வந்ததும் பணி




அதிகாரிகள் கூறுகையில், 'பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ளதால், சிறிய அளவிலான பராமரிப்பு பணிகள், பிரதான கால்வாய், கிளை மற்றும் பகிர்மான கால்வாய்களில் மடைகள் மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. பிரதான கால்வாயில், முழுமையாக பணி மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி வந்ததும் பணி மேற்கொள்ளப்படும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X