டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறிப்பு | மதுரை செய்திகள் | Dinamalar
டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
01:29

மதுரை:டெய்லரை மிரட்டி 10 லட்சம் ரூபாய் பறித்த பெண் இன்ஸ்பெக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.



சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியைச் சேர்ந்தவர் அர்ஷத், 32; டெய்லர். இவர் பேக் தயாரிக்கும் கம்பெனி வைக்க சிலரிடம், 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.கூடுதல் பணத்துக்காக, பாண்டி என்பவருடன், ஜூலை 5ல் நாகமலை புதுக்கோட்டைக்கு வந்தார். அப்போது, அங்கு வந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, விசாரிக்க வேண்டும் எனக் கூறி அர்ஷத், பாண்டி, அவரது நண்பர் கார்த்திக்கை ஜீப்பில் அழைத்துச் சென்றார். சிறிது துாரம் சென்றதும், 10 லட்சம் ரூபாயை பறித்து, அர்ஷத்தை மட்டும் இறக்கி விட்டார்.



பணத்தை கேட்டதற்கு தங்கம், கஞ்சா கடத்தியதாக கைது செய்து விடுவேன் என மிரட்டினார். எஸ்.பி., பாஸ்கரனிடம் அஷ்ரத் புகார் செய்தார். ஏ.டி.எஸ்.பி., சந்திரமவுலி விசாரித்தார்.வசந்தி, பாண்டி, கார்த்திக் உட்பட ஐந்து பேர் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் வசந்தி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.



நடந்தது என்ன?



போலீசார் கூறியதாவது:பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சிலர் கூறியதை நம்பி, அர்ஷத் 10 லட்சத்துடன் நாகமலை புதுக்கோட்டைக்கு வந்துள்ளார். இதை பாண்டி, கார்த்திக் உள்ளிட்டோர் மூலம் அறிந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, விசாரிப்பது போல் அழைத்துச் சென்று மிரட்டி பணம் பறித்துள்ளார்.பணத்தை இரட்டிப்பு செய்வது குற்றம் என்பதால், இவ்விவகாரத்தை வெளியே சொல்ல மாட்டார் என நினைத்துள்ளார். தொடர்ந்து, விசாரணை நடக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X