துடித்தோம் தரையினிலே... திரும்பினோம் கடலிடமே! புதிய சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை: எதிர்பார்ப்புகளுடன் தொழிலாளர்கள் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
துடித்தோம் தரையினிலே... திரும்பினோம் கடலிடமே! புதிய சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை: எதிர்பார்ப்புகளுடன் தொழிலாளர்கள்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

30 ஜூலை
2021
03:39
பதிவு செய்த நாள்
ஜூலை 30,2021 03:35

திருப்பூர்:கொரோனா இரண்டாவது அலை தணிந்துள்ள நிலையில், திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் இயக்கம் வேகமெடுத்துள்ளது. வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பியுள்ளனர்; 'துடித்திருந்தோம் தரையினிலே... திரும்பிவிட்டோம் கடலிடமே' என்ற மன நிலை, பணிக்கு திரும்பிய தொழிலாளர்களிடம் நிலவுகிறது.தற்போது, புதிய சம்பள ஒப்பந்தப் பேச்சுவார்த்தை துவங்குவதற்கான தருணம். ஆக., 4ல் முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு, உற்பத்தியாளர் - தொழிற்சங்கங்கள் தயாராகியுள்ளன.


மகிழ்ச்சியுடன்தொழிற்சங்கங்கள்



நேற்றுமுன்தினம் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில், சங்க தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த கூட்டத்தில், 'சைமா', ஏற்றுமதியாளர் சங்கம், 'நிட்மா', 'சிம்கா', 'டீமா', 'டெக்மா' மற்றும் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். பனியன் தொழிற்சங்கங்களுடன், வரும் ஆக., 4ம் தேதி, மாலை 4:30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.சம்பள பேச்சுக்கான உற்பத்தியாளர் சங்கங்களின் அழைப்பு, பனியன் தொழிலாளர்களையும், ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., - எல்.பி.எப்., - அண்ணா தொழிற் சங்கம், ஐ.என்.டி.யு.சி., - எம்.எல்.எப்., - எச்.எம்.எஸ்., உட்பட பேச்சுவார்த்தையில் அங்கம்வகிக்கும் தொழிற்சங்கத்தினரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.




புதிய ஒப்பந்தம்நிறைவேறுமா?



சி.ஐ.டி.யு., பனியன் சங்க செயலாளர் சம்பத் கூறியதாவது:பல்வேறு காரணங்கள் கூறி, பேச்சுவார்த்தை நடத்தாமல், உற்பத்தியாளர் சங்கங்கள் இழுத்தடித்துவந்தன. தொழிற்சங்கங்கள் தரப்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டது.இந்நிலையில், வரும் ஆக., 4ம் தேதி பேச்சு வார்த்தைக்கு அழைப்புவிடுத்திருப்பது, மகிழ்சி அளிக்கிறது. முதல் சுற்று பேசினால்தான், ஆடை உற்பத்தியாளர்களின் மனநிலை என்ன; ஒப்பந்த பேச்சின் அடுத்தடுத்த போக்கு எப்படி அமையும் என்பதை கணிக்க முடியும். தற்போது, அனைத்து தொழிற்சங்கங்களும் பேச்சுவார்த்தைக்கு தயார் நிலையில் உள்ளன. பழைய ஒப்பந்தம் முடிந்து 15 மாதங்களாகிவிட்டது. எனவே, விரைந்து புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது.இவ்வாறு, சம்பத் கூறினார்.



16 அம்சங்களுடன்கோரிக்கை பட்டியல்


திருப்பூர் பனியன் தொழிலாளருக்காக, கடந்த 2016ல் நிறைவேற்றப்பட்ட சம்பள ஒப்பந்தம், கடந்த 2020 மார்ச் மாதம் நிறைவடைந்தது. புதிய ஒப்பந்தத்துக்காக, 80 சதவீத சம்பள உயர்வு உட்பட 16 அம்சங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த கோரிக்கை பட்டியல் தயாரித்து, ஆடை உற்பத்தியாளர் சங்கங்களிடம், தொழிற்சங்கங்கள் வழங்கின.கொரோனா அலை ஓய்ந்து, பின்னலாடை உற்பத்தி மீண்டும் வேகமெடுத்துள்ளது. வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து தொழிலாளர் திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். ஏற்கனவே தாமதமாகிவிட்டதால், பேச்சுவார்த்தையை துவக்கி, விரைந்து சம்பள ஒப்பந்தம் மேற்கொள்வதில், ஆடை உற்பத்தியாளர் சங்கங்கள் முனைப்பு காட்டிவருகின்றன.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X