வாலிபரை கடத்தி தாக்கிய கந்து வட்டி கும்பல் கைது | சென்னை செய்திகள் | Dinamalar
வாலிபரை கடத்தி தாக்கிய கந்து வட்டி கும்பல் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
01:19

சென்னை: ஆவடி அருகே, வாலிபரை கடத்தி தாக்கிய கந்துவட்டி கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


ஆவடி, கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர், 21; கல்லுாரி மாணவர். இவர், தந்தை மணிக்கு உதவியாக பாய் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்கள், மதுரவாயிலைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். கடந்த 27ம் தேதி சண்முகம், அவரது மகன் பாஸ்கர் உள்ளிட்டோர், சேகரை காரில் கடத்தி சென்று, மாங்காடு அருகே வைத்து, பணத்தை கேட்டு சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, சேகரின் சகோதரர் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.


அந்த தொகையை வட்டிக்கு கழித்து கொள்வதாகவும், அசல் தொகையாக, மேலும் இரண்டு லட்சம் ரூபாய் தர வேண்டும் எனக் கூறி, அந்த கும்பல் அங்கிருந்து தப்பினர். படுகாயமடைந்த சேகர், சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.


ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சேகர், தந்தையுடன், வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் மீட்டு அறிவுரை வழங்கினர். அதன் பின், வழக்குப்பதிவு செய்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், பருத்திப்பட்டைச் சேர்ந்த பாஸ்கர் 34, ராஜேந்திரன் 45 ஆகிய இருவரை கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள சண்முகம் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X