வெட்டுனீங்களே... நட்டீங்களா? இடமில்லை என நழுவுது நெடுஞ்சாலை ஆணையம்:24,000 மரங்களுக்கு ஏட்டில்தான் இருக்கு கணக்கு! | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வெட்டுனீங்களே... நட்டீங்களா? இடமில்லை என நழுவுது நெடுஞ்சாலை ஆணையம்:24,000 மரங்களுக்கு ஏட்டில்தான் இருக்கு கணக்கு!
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

01 ஆக
2021
01:51
பதிவு செய்த நாள்
ஆக 01,2021 01:31

கோவை:கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்று நடுவதற்கு இடமில்லை என, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், பொறுப்பைத் தட்டிக் கழித்துள்ளது. வெட்டிய மரங்களுக்கு ஈடாக, 24 ஆயிரம் மரக்கன்றுகள் வேறு பகுதிகளில் நடப்பட்டதாக, 'ஏட்டுக் கணக்கை' மட்டும் காட்டுகிறது.கோவையையும் நாகப்பட்டினத்தையும் தேசிய நெடுஞ்சாலை 83 இணைக்கிறது. இதில், கோவை-பொள்ளாச்சி இடையிலான சாலை, சுமார் 600 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. 2019ம் ஆண்டு முதல், இந்தச் சாலை, முழு அளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது, ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. வளர்ச்சிப்பணிகளுக்காக ஒரு மரம் வெட்டப்பட்டால், அதற்கு ஈடாக, 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்பது ஒப்பந்த விதி.ஆனால், கோவை-பொள்ளாச்சி தேசியநெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடப்படவே இல்லை.விரல் விட்டு எண்ணும் அளவுக்குக் கூட, மரங்களே இல்லை. இதுதொடர்பாக, நமது நாளிதழில் கடந்த 16ம் தேதி செய்தி வெளியாகி இருந்தது.இதனிடையே, கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது, வெட்டப்பட்ட மரங்கள், அதற்குப் பதிலாக நடப்பட்ட மரக்கன்றுகள் குறித்து, மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த, சமூக ஆர்வலர் சுஜாதா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கோரியிருந்தார்.அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், 'நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது, 2,239 மரங்கள் வெட்டப்பட்டன. நெடுஞ்சாலையின் ஓரத்தில், புதிதாக மரக்கன்றுகள் நடுவதற்கு இடமில்லை. எனவே, 24 ஆயிரம் மரக்கன்றுகள் பொள்ளாச்சி சப்-கலெக்டரின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிடம் ஒப்படைக்கப்பட்டன. அவை, அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் நடப்பட்டன. அந்த மரக்கன்றுகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 'வாடகை அடிப்படையில், தண்ணீர் லாரிகள் வாயிலாக, அந்த மரக்கன்றுகளுக்கு ஒப்பந்ததாரர் நீர் பாய்ச்சி பராமரிக்கிறார். குறிப்பிட்ட இடைவெளியில், அந்தந்தப்பகுதி ஊராட்சி நிர்வாகங்கள், இப்பணியை மேற்பார்வை செய்கின்றன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் சுஜாதா கூறியதாவது:நெடுஞ்சாலை ஓரத்தில் இடமில்லை என்பது வெறும் சாக்கு. வடிகால் வசதிக்காக அமைக்கப்பட்ட கால்வாய்களில், குப்பைதான் கிடக்கிறது.


அதன் அருகில் மரக்கன்றுகள் நடலாம். குறிப்பிட்ட அந்த 24,000 மரக்கன்றுகள் எங்கு நடப்பட்டன என்ற கேள்விக்கு, இதுவரை பதில் இல்லை. உள்கட்டமைப்பு வசதிகள் அவசியம்தான்.ஆனால், மரக்கன்றுகளை வேறு இடத்தில் நடுவது எப்படி, சரியான ஒன்றாக இருக்க முடியும். ஒருவருக்குப் பதிலாக மற்றொருவர் சுவாசிக்க முடியுமா? பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சாலையோரத்திலேயே மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


விளக்குமா மாவட்ட நிர்வாகம்?


மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிடம் ஒப்படைக்கப்பட்ட மரக்கன்றுகள், எந்தெந்தப் பகுதிகளில், எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டன என்பது குறித்து, சப்--கலெக்டர் அலுவலகத்தில் விசாரித்தோம். 'வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம், பல்வேறு ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டது. முழு விவரங்கள் தற்போது இல்லை' என்றே பதில் வந்தது.ரோட்டில் இருந்ததை வெட்டி விட்டு, வெறும் ஏட்டில் மட்டும் மரம் வளர்ப்பதாக, கணக்கு எழுதியிருப்பதாகவே தோன்றுகிறது.அந்த 24 ஆயிரம் மரக்கன்றுகளின் தற்போதைய நிலை குறித்து, மாவட்ட நிர்வாகம் விளக்க வேண்டும் என்பதே, பசுமை ஆர்வலர்களின் கோரிக்கை.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X