கள்ளக்குறிச்சி : மத்திய அரசின் தேசிய திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது.
டில்லி தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆண்டுதோறும் மத்திய அளவில் தேசிய திறனறி தேர்வை மாணவ, மாணவிகளுக்கு நடத்தி ஊக்கப்படுத்தி வருகிறது.இத்தேர்வில் கலந்து கொண்ட ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் பாலு பிரசன்னா, இரண்டாம் நிலைக்கு தகுதியாகி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் உயர்கல்வி முதல் முனைவர் பட்டம் பெறும் வரை மத்திய அரசு மாதம் தோறும் வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு தகுதி பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவரை ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் சுதர்சனா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.