ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே பாகப் பிரிவினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மகனை அடித்துக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 70; இவரது மகன்கள் தாமோதரன், அலெக்ஸ் பாண்டியன், 35; தவிர இரண்டு மகள்கள் உள்ளனர்.அண்ணாமலையின் தந்தை முனுசாமி தனக்கு சொந்தமான 3 ஏக்கர் விளை நிலத்தை முதல் பேரன் தாமோதரன் பெயரில் எழுதி வைத்துவிட்டு, இறந்து விட்டார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சாலை விபத்தில் தாமோதரன் இறந்ததால், அந்த நிலத்தில் அண்ணாமலை பயிர் செய்து வருகிறார்.இவரிடம், 3 ஏக்கர் விளை நிலத்தில் தனக்கு சொந்தமான பாகத்தை பிரித்துத் தரும்படி அலெக்ஸ்பாண்டியன் கேட்டு, அவ்வப்போது தகராறு செய்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை இருவருக்கும் தகராறு எற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர்.அன்று இரவு அலெக்ஸ்பாண்டியன் வீட்டிற்கு வெளியே துாங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் குடிபோதையில் சென்ற அண்ணாமலை, ஆத்திரத்தில் முள்வேலி கட்டையினால் தலையில் தாக்கியதால் அலெக்ஸ்பாண்டியன் துடிதுடித்து இறந்தார்.திருக்கோவிலுார் டி.எஸ்.பி., கெங்காதரன், இன்ஸ்பெக்டர் பாபு, ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். மகன் அலெக்ஸ்பாண்டியனை கட்டையால் அடித்து கொலை செய்ததை அண்ணாமலை ஒப்புக்கொண்டார். உடன் போலீசார், அவரை கைது செய்தனர்.