கோபி: கோபி அரசு மருத்துவமனைக்கு, தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், 1.68 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்களை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா தொற்றால் இறந்த ஆசிரியரின் வாரிசுக்கு, ஆசிரியர் கூட்டணி சார்பில், 1.07 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. கோபி அரசு மருத்துவமனை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்கு, 6.89 கோடி ரூபாயில் கட்டட வசதி செய்யப்படவுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி பாசனங்களுக்கு, பவானிசாகர் அணையில் இருந்து, ஆக.,1ல் தண்ணீர் திறக்கலாம் என கருதினோம். ஆனால், ஆக.,15ல் திறந்தால்தான் சரியாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.