வாலாஜாபாத்: வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, முத்தியால் பேட்டை, அய்யன் பேட்டை, திம்மையன்பேட்டை ஆகிய ஊராட்சிகளில், பொது மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து, பொது மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
உத்திரமேரூர் மற்றும் சாலவாக்கம் பஸ் நிலையத்தில், கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார வார விழாவை, உத்திரமேரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., சுந்தர் துவக்கி வைத்தார். முதல் கையெழுத்திட்டு, கையெழுத்து இயக்கத்தையும் துவங்கி வைத்து, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சாலவாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், செயலர் சக்திவேல் செய்திருந்தார்.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், சிறுகாவேரிப்பாக்கம், கீழம்பி, திருப்புட்குழி, திருப்பருத்திக்குன்றம், உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில், கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், உறுதி மொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வம், உறுதிமொழி படித்தார். காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன் மற்றும் நகராட்சி ஆணையர் லட்சுமி, நகராட்சி, பொறியாளர் ஆனந்த ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்மாமல்லபுரத்தில், குவிந்த சுற்றுலாப் பயணியரிடம், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு விழிப்புணர்வு, ஒருவார பிரசாரத்தை, பேரூராட்சி நிர்வாகத்தினர், துண்டு பிரசுரம் வழங்கி துவக்கினர்.