மதுரை : மதுரை மாநகராட்சியில் மண்டல அளவில் 5000 சதுரடி வரை குடியிருப்பு கட்டடங்கள், பிற கட்டடங்கள் கட்ட விரைவாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பொறியாளர்கள் சங்க தலைவர் சுந்தரபாண்டியன், செயலாளர் ஜம்புலிங்கம், பொருளாளர் சக்திகுமார் கூறியதாவது: 2019ல் நகராட்சி, குடிநீர் வழங்கல் துறை கட்டட விதியில் 'சைடு ஓப்பன் ஸ்பேஸ்' குறைக்கப்படும், தொடர் கட்டுமான பகுதியில் ஒப்பன் ஸ்பேஸ் தேவையில்லை என உள்ளது. இதுவரை இதில் எந்த சர்வே எண்கள் அடங்கும் என அறிவிக்கவில்லை.
தமிழகத்தில் உள்ளாட்சிகளில் குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கும் அதிகார பகிர்வு 7000 சதுரடியில் இருந்து 10,000 சதுரடியாக அதிகரிக்கப்படும் என வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை 2020ல் கூறியது. தற்போது 10,000 சதுரடியில் 1500 சதுரடி தான் மண்டல அளவில் வழங்கப்படுகிறது. 1501 - 10,000 சதுரடி கோப்புகமிஷனர் ஒப்புதலுக்கு சென்று வர பல மாதங்களாகிறது.
இப்பிரச்னை தவிர்க்க மாநகராட்சி மண்டல அளவில் 5000 சதுரடி வரை குடியிருப்புகளுக்கு அதிகார பகிர்வு வழங்க வேண்டும். அரசுக்கு கூடுதல் வருவாயும் கிடைக்கும். வணிக கட்டடங்களுக்கு 2000 சதுரடி வரை அனுமதி வழங்க உள்ளாட்சிக்கு அனுமதி உண்டு. அதற்கு மேல் கட்டுவோர் ஊரமைப்பு அலுவலகம் செல்லும் நிலையில் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது. 2000 சதுரடிக்கு அனுமதி வாங்கி விதிமீறி கூடுதலாக கட்டுகிறார்கள் என்றனர்.