திருப்பூர்:முதலிபாளையம், நீலிக்காடு பகுதி மக்கள், அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவை ரத்து செய்யக்கூடாது என, கோரிக்கை வைத்துள்ளனர்.வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தாட்கோ திட்டம் மூலமாக, ஏழை, எளிய மக்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. இலவச வீட்டுமனை பட்டா வாங்கியவர்கள், அடுத்த ஆறு மாதத்திற்குள் வீடு கட்டி குடியேற வேண்டும்.இல்லாதபட்சத்தில், பட்டாவை ரத்து செய்துவிட்டு, வேறு பயனாளிகளுக்கு வழங்கவும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இதுநாள் வரை பட்டா பெற்றவர்களில், 40 சதவீதம் பேர் வீடு கட்டாமல் வைத்துள்ளனர்.தமிழக அரசு, உண்மையான பயனாளிகளுக்கு வீட்டுமனை வழங்கும் நோக்கில், வீடு கட்டாத மனையிடங்களில், பட்டா ரத்து செய்ய உத்தரவிட்டது. அவ்வகையில், பட்டாவை ரத்து செய்து, வேறு பயனாளிகளுக்கு வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.முதலிபாளையம் - நீலிக்காடு பகுதியில், வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ததால், முதலில் பட்டா பெற்ற குடும்பத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர்.மனுவில், 'நீலிக்காடு பகுதியில், 1998ல் பட்டா வழங்கப்பட்டது. அடிப்படை வசதியில்லாத கார ணத்தால், வீடு கட்டி போக முடியவில்லை. மீண்டும் எங்களுக்கே பட்டா வழங்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.