மதுரை : ''அரசு நடத்தும் கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாமை ஒருங்கிணைக்க எங்களை விட மிகப்பெரிய மனிதவளத்தை கொண்ட கல்வித்துறையையும் சேர்க்க வேண்டும்'' என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் சங்க மாநிலத்தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது: அரசின் சிறப்பு தடுப்பூசி முகாம் மிகச்சிறந்த திட்டம் தான். அதில் எங்களின் பங்கு தடுப்பூசி செலுத்தி கண்காணிப்பது தான். ஆனால் ஆட்களை அழைத்து வரவும் எங்களை நிர்ப்பந்திப்பது நியாயமில்லை. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் கல்வித்துறையையும் ஒருங்கிணைக்க வேண்டும். கல்வித்துறையில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். அவர்களின் மூலம் முகாமிற்கு ஆட்களை திரட்டுவது எளிதான செயல். இப்படி செய்தால் வாரத்திற்கு மூன்று நாட்கள் வீதம் முகாம் நடத்தி இரண்டரை மாதத்தில் 4.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி 80 சதவீத இலக்கை அடையலாம்.நான்காண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு குறித்த எங்களது கோரிக்கைகள் அரசாணை 293 மூலம் மாறுபட்ட வடிவத்தில் வழங்கப்பட்டது. இந்த அரசாணையால் பயன்பெறாத ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், அதிகாரிகள் சிலரால் அரசாணை 293 இரண்டு மாதங்களாக நடைமுறைபடுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா உதவித்தொகை இதுநாள் வரை வழங்கப்படவில்லை. இந்த உதவித்தொகைக்கு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் சில பிரிவு பணியாளர்களை பயனாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை. அவர்களையும் சேர்த்து உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா தொற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு வார விடுமுறை, பொது விடுமுறை வழங்க வேண்டும். டாக்டர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு 'விடுப்பு ஒப்படைப்பு' பணப்பயன் வழங்க வேண்டும்.
ஒருசில மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தின் தவறான வழிகாட்டுதலால் டீக்கடைகள் உட்பட பொது இடங்களில் தடுப்பூசி செலுத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். எந்த ஊசியாக இருந்தாலும் நின்று கொண்டே செலுத்தக்கூடாது. கோவிட் தடுப்பூசிக்கு சிறிது நேர கண்காணிப்பும் தேவை. ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் டாக்டர்களே பொறுப்பேற்க நேரிடும் என்பதால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் பாப்பையா, செயலாளர் ரமேஷ், பொருளாளர் அருள் சுந்தரேஷ்குமார் உடனிருந்தனர்.