அடையாறு : சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த பெண் துாய்மை பணியாளருக்கு, கமிஷனர் பாராட்டு சான்று வழங்கினார்.
அடையாறு மண்டலம், 175வது வார்டு துாய்மை பணியாளர் பழனியம்மாள், 40. கடந்த, 8 ம்தேதி, அடையாறு, கஸ்துாரிபாய்நகர் ஏழாவது தெருவை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது, சாலையில் ஒரு பை கிடந்தது. அதில், 50 ஆயிரம் ரூபாய் இருந்தது. சிறிது நேரத்தில், அதே பகுதியை சேர்ந்த ரோஸ்லெட்மேரி என்ற பெண், தொலைத்த பையை சாலையில் தேடினார்.
இதை பார்த்த பழனியம்மாள், பையின் அடையாளத்தை கேட்டு, பணப்பையை ரோஸ்லெட் மேரியிடம் கொடுத்தார். தன்னலம் கருதாமல், சாலையில் கிடந்த பணப்பையை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த பழனியம்மாளின் நற்குணத்தை பலரும் பாராட்டினர்.இந்நிலையில், நேற்று முன்தினம், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, பழனியம்மாளை அழைத்து அவருக்கு பாராட்டு சான்று வழங்கினார்.