புதுச்சேரி-சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக வந்த புகாரின் பேரில், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.வருவாய் துறை அலுவலகங்களில், சாதி, வருவாய் உள்ளிட்ட சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கின்றனர். கால தாமதம் செய்கின்றனர் என, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் ஹேமச்சந்திரன், தியாகராஜன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர், நேற்று காந்தி நகரில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தச் சென்றனர்.கூட்டம் அதிகமாக இருந்ததால், மக்கள் வரிசையில் காத்திருந்தனர். அங்கு பணியில் இருந்து நான்கு வி.ஏ.ஓ.,க்களிடம் போலீசார் விசாரித்தனர். காலை 10.30 மணி முதல் 11.30 வரை சோதனை நடத்தினர். இதில், தொகை எதுவும் கைப்பற்றப்படவில்லை. வி.ஏ.ஓ.,க்கள் கூறுகையில், 'காலி பணியிடம் அதிகமாக இருப்பதால் வேலை பளு அதிகம். அதனால்தான் மாணவர்களுக்கு சான்று தர கால தாமதம் ஆகிறது' என தெரிவித்தனர்.லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், சான்றிதழ்களை பெற கால தாமதம் ஆவதால் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் பல வந்தன. அதனால் அரசு அலுவலகங்களில் சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சோதனை செய்தோம். முக்கிய அரசு அலுவலகங்களில் சோதனை தொடரும்' என தெரிவித்தனர்.