தர்மபுரி: பென்னாகரம் அடுத்த நலப்பரம்பட்டியை சேர்ந்தவர் கிறிஸ்டிதாஸ், 21. இவர், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இறுதியாண்டு படித்து வருகிறார். இவரது, 'பேஸ்புக்'கில், ஜூலி பேட்ரிக் என்பவருடன் நட்பான கிறிஸ்டிதாஸ் அவருடன் பழகி வந்துள்ளார். கடந்த ஆக., 15ல், ஐபோன், ஜெபமாலை, ஆலிவ் ஆயில், புனிதநீர், பைபிள், 60 ஆயிரம் டாலர் தொகை ஆகியவற்றை ஆதரவற்றோர் இல்லங்கள் மூலம் அனுப்பி உள்ளதாகவும், அவற்றை பெற்றுக்கொள்ள கூரியர் கட்டணமாக, 25 ஆயிரத்து, 500 ரூபாய் மற்றும் டாகுமெண்ட் கட்டணமாக, 75 ஆயிரத்து, 500 ரூபாய் செலுத்த வேண்டும் என, ஜூலிபேட்ரிக், கிறிஸ்டிஸ்தாசிடம் கூறியுள்ளார். இதை நம்பிய கிறிஸ்டிதாஸ், தன் வங்கிக்கணக்கிலிருந்து, ஜூலிபேட்ரிக் கூறிய வங்கி கணக்குக்கு, ஒரு லட்சத்து, ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், தனக்கு, ஜூலி பேட்ரிக் கூறிய படி, 60 ஆயிரம் டாலர், ஐபோன் உள்ளிட்டவை வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து அவரது புகாரின்படி, தர்மபுரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரிக்கிறார்.