திருப்பூர்:நேற்று நடந்த ஏழாவது சுற்று சம்பள பேச்சுவார்த்தையிலும், இருதரப்பினரிடையே உடன்பாடு ஏற்படவில்லை. வரும் 28ல், எட்டாவது சுற்று பேச்சு நடைபெற உள்ளது.திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்க, ஆடை உற்பத்தியாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கத்தினர் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தற்போதைய சம்பளத்தில் இருந்து, 90 சதவீதம் உயர்த்தி தர வேண்டுமென தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர். ஆக., 4ம் தேதி முதல் கடந்த 10ம் தேதி வரை, இருதரப்பினரும் ஆறு சுற்று பேச்சு நடத்தியுள்ளனர். துவக்கத்தில், 24 சதவீத சம்பள உயர்வு வழங்குவதாக தெரிவித்த உற்பத்தியாளர் சங்கம் தரப்பு, அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் மெல்ல நகர்ந்து, 28 சதவீதம் வரை சம்மதித்தன.
தொழிற்சங்கங்கள் இதற்கு உடன்படவில்லை; கூடுதல் உயர்வு வேண்டுமென கேட்கின்றன. இந்நிலையில், ஏழாவது சுற்று சம்பள பேச்சுவார்த்தை, 'சைமா' சங்க அரங்கில் நேற்று நடந்தது. மாலை 5:25 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை, இரவு, 7:20மணி வரை நடந்தது.
பேச்சுவார்த்தை குழு தலைவர் துரைசாமி (ஏற்று மதியாளர் சங்கம்) தலைமை வகித்தார். சைமா, ஏற்றுமதியாளர் சங்கம், டீமா, நிட்மா, சிம்கா, டெக்மா ஆகிய ஆறு ஆடை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - ஐ.என்.டி.யு.சி., - ஏ.டி.பி., சங்கம் - எம்.எல்.எப்., - பி.எம்.எஸ்., - எச்.எம்.எஸ்., - எல்.பி.எப்., உள்ளிட்ட எட்டு தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.காரம் கொஞ்சம் அதிகம்தொழில் நிலை சரியில்லை. 28 சதவீதத்துக்கு மேல் உயர்வு வழங்க முடியாது, என்றனர், உற்பத்தியாளர் சங்க தரப்பினர். சாய ஆலை மூடல், மின்வெட்டு பிரச்னைகளால், தொழில் கடுமையாக பாதித்த காலங்களில் கூட சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அப்போதைவிட, இப்போது தொழில் நிலை மோசமாக இல்லை' என்றர் தொழிற்சங்கத்தினர்.
முந்தைய ஒப்பந்த விகிதத்திலேயே (2016-ல் 33 சதவீத சம்பள உயர்வுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது) இப்போதும், எதிர்பார்க்கிறீர்களா?' என உற்பத்தியாளர் சங்க தரப்பில் கூறப்பட்டது. அதற்கு, 'நீங்களாக எப்படி முடிவு செய்யலாம்; நாங்கள் அதைவிட அதிகமாக எதிர்பார்க்கிறோம்,' என, தொழிற்சங்க தரப்பு கூற, பேச்சில் காரசாரம் மிகுந்து காணப்பட்டுள்ளது.
மீண்டும், வரும் 28ம் தேதி, பேச்சுவார்த்தை நடத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இழுபறி நிலை நீடிப்பது, விரைவில் சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கும் தொழிலாளர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.முந்தைய (2016) ஒப்பந்த விகிதத்திலேயே, இப்போதும், எதிர்பார்க்கிறார்களா?' - உற்பத்தியாளர் தரப்பு'நீங்களாக எப்படி முடிவு செய்யலாம்; நாங்கள் அதைவிட அதிகமாக எதிர்பார்க்கிறோம்,' - தொழிற்சங்க தரப்பு